வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3-வது டி-20 கிரிக்கெட்; இங்கிலாந்து அணி வெற்றி

5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

Update: 2023-12-16 21:46 GMT

Image Courtesy : @englandcricket

கிரெனடா,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை 2-1 என கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணி கைப்பற்றியது.

இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இரண்டு டி-20 போட்டிகளிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது டி-20 போட்டி கிரெனடாவில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 222 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரான் 45 பந்துகளில் 82 ரன்கள் குவித்தார். இதுதவிர ரோவ்மான் போவெல் 39 ரன்களும், ஷாய் ஹோப் 26 ரன்களும், ரூதர்போர்டு 29 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர்.

இங்கிலாந்து அணியில் அடில் ரஷீத் மற்றும் சாம் கர்ரன் தலா 2 விக்கெட்டுகளும், மொயீன் அலி மற்றும் ஆர்.டாப்லி தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி பேட்டிங்கை தொடங்கியது.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பிலிப் சால்ட் மற்றும் ஜாஸ் பட்லர் இருவரும் அதிரடியாக ஆடி அரைசதத்தைக் கடந்தனர். இதில் ஜாஸ் பட்லர் 34 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். லயாம் லிவிங்ஸ்டன் 3 சிக்ஸர்கள் விளாசி 30 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார்.

மறுபுறம் நிலைத்து நின்று சதத்தைக் கடந்த பிலிப் சால்ட், 56 பந்துகளில் 4 பவுண்டரிகள், 9 சிக்சர்கள் விளாசி 109 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இறுதியில் இங்கிலாந்து அணி 19.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இருப்பினும் 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்