3-வது 20 ஓவர் கிரிக்கெட்: தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி
3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று நடக்கிறது.
கவுகாத்தி,
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் விசாகப்பட்டினத்தில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 2 விக்கெட் வித்தியாசத்திலும், திருவனந்தபுரத்தில் நடந்த 2-வது ஆட்டத்தில் 44 ரன் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பார்சாபாரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகிறது.
இன்றைய ஆட்டம் ஆஸ்திரேலிய அணிக்கு மிகவும் முக்கியமானதாகும். இதில் தோற்றால் அந்த அணி தொடரை இழக்க வேண்டியது வரும். எனவே தொடரை வெல்லும் வாய்ப்பில் நீடிக்க அந்த அணி தனது முழு பலத்தையும் வெளிப்படுத்தும். அதேநேரத்தில் தனது ஆதிக்கத்தை நீடித்து தொடரை தன்வசப்படுத்த இந்திய அணி தீவிரம் காட்டும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.
இவ்விரு அணிகளும் இதுவரை 20 ஓவர் போட்டியில் 28 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 17 ஆட்டங்களில் இந்தியாவும், 10 ஆட்டங்களில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்று இருக்கின்றன. ஒரு ஆட்டம் முடிவில்லாமல் போனது.
கவுகாத்தியில் இந்திய அணி மூன்று 20 ஓவர் போட்டியில் ஆடி ஒன்றில் வெற்றியும் (தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக), ஒன்றில் தோல்வியும் (ஆஸ்திரேலியாவுக்கு எதிராக) கண்டுள்ளது. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது.
கடைசியாக 2022-ம் ஆண்டு இங்கு நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 237 ரன் குவித்தது. பேட்டிங்குக்கு அனுகூலமான இந்த ஆடுகளத்தில் ரன் மழையை எதிர்பார்க்கலாம். 2-வது பகுதியில் பனியின் தாக்கமும் இருக்கக்கூடும்.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல்:-
இந்தியா: ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ரிங்கு சிங், திலக் வர்மா, அக்ஷர் பட்டேல், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், பிரசித் கிருஷ்ணா.
ஆஸ்திரேலியா: ஸ்டீவன் சுமித், மேத்யூ ஷார்ட், ஜோஷ் இங்லிஸ், மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், டிம் டேவிட், மேத்யூ வேட் (கேப்டன்), ஆடம் ஜம்பா, நாதன் எலிஸ், ஜாசன் பெரென்டோர்ப் அல்லது சீன் அப்போட், தன்வீர் சங்கா.