வீரர்கள் இல்லை.. இந்திய அணிக்கு இப்போது அவர்தான் பிரச்சினை - ஆஸி. முன்னாள் கேப்டன்

விராட் மற்றும் ரோகித் ஆகியோரது பார்ம் கவலைக்குரிய விஷயம் இல்லை என்று டிம் பெய்ன் தெரிவித்துள்ளார்.

Update: 2024-11-16 15:46 GMT

image courtesy: PTI

சிட்னி,

இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர்-கவாஸ்கர் கோப்பையான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது.

முன்னதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங், இந்திய நட்சத்திர வீரரான விராட் கோலியின் பார்ம் கவலையளிக்கும் விதமாக உள்ளதாகவும், டெஸ்ட் போட்டிகளில் 5 வருடத்தில் 3 சதங்கள் என்பது சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் வீரருக்கு உகந்ததாக இல்லை என்றும் அவர் கூறியிருந்தார். எனவே விராட் கோலி ஆஸ்திரேலியாவில் சிறப்பாக விளையாட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டிருந்தார்

இது குறித்து ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கு முன்பாக தலைமை பயிற்சியாளரான கம்பீரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கம்பீர், "இந்திய அணியை பற்றி பேசுவதற்கு ரிக்கி பாண்டிங் யார்?. விராட் கோலி, ரோகித் சர்மா ஆஸ்திரேலியாவில் அசத்துவார்கள். பாண்டிங் ஆஸ்திரேலிய அணி குறித்து யோசித்தால் போதும்" என்று காட்டமாக பதிலடி கொடுத்தார். அவரது இந்த கருத்து பலது மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் டிம் பெயின், கம்பீரின் இந்த விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "கம்பீர் அப்படி பேசியது எனக்கு பிடிக்கவில்லை. ரிக்கி பாண்டிங்கை அவர் இன்னும் எதிரணியின் வீரராகவே நினைக்கிறார். ஆனால் பாண்டிங் தற்போது வர்ணனையாளராக உள்ளார். தற்போதைய இந்திய அணியை பொறுத்தவரை எந்த வீரரின் பார்மும் சரியாக இல்லை என்று நினைக்கிறேன். அதிலும் குறிப்பாக விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரது பார்ம் கவலைக்குரிய விஷயமாக இல்லை என்றே நான் நினைக்கிறேன்.

அதைவிட தற்போதைக்கு இந்திய அணியின் பிரச்சினை கம்பீருடைய அமைதியற்ற குணம்தான் என்று நினைக்கிறேன். இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி இந்திய அணியின் வீரர்களை உற்சாகப்படுத்தி விளையாட வைத்தார். அதனால் கடந்த இரண்டு முறையும் இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் தொடரை கைப்பற்றியது. ஆனால் தற்போதைய புதிய பயிற்சியாளர் கம்பீர் அணியை வழிநடத்தும் விதத்தை பார்த்தால் அவருடைய பாணியே சரியில்லை. அவர்தான் தற்போது இந்திய அணிக்கு பிரச்சினை" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்