2-வது டெஸ்ட் போட்டி: இந்தியா-ஆஸ்திரேலியா இடையே இன்று 2-வது நாள் ஆட்டம்

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 263 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

Update: 2023-02-18 00:26 GMT

புதுடெல்லி,

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 'பார்டர்-கவாஸ்கர்' கோப்பைக்கான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் நாக்பூரில் நடந்த தொடக்க டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி தலைநகர் டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. 'டாஸ்' ஜெயித்த ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதன்படி டேவிட் வார்னரும், உஸ்மான் கவாஜாவும் ஆஸ்திரேலியாவின் இன்னிங்சை தொடங்கினர். சிறப்பான தொடக்கம் தந்த இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்து பிரிந்தனர். பந்தை 'ஸ்விங்' செய்து நெருக்கடி கொடுத்த ஷமியின் பந்து வீச்சில் வார்னர் (15 ரன்) விக்கெட் கீப்பர் பரத்திடம் பிடிபட்டார்.

அடுத்து கவாஜாவுடன், லபுஸ்சேன் இணைந்தார். சில பவுண்டரிகளை அதிரடியாக விரட்டியடித்த கவாஜா துரிதமாக ரன் சேகரித்தார். ரன்ரேட்டும் 4-ல் நகர்ந்தது. ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலியா ஒரு விக்கெட்டுக்கு 91 ரன்களுடன் (22.2 ஓவர்) நல்ல நிலையில் தென்பட்டது.

இந்த சூழலில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ஒரே ஓவரில் இரட்டை தலைகளை உருட்டினார். அவரது பந்து வீச்சில் லபுஸ்சேன் (18 ரன்) எல்.பி.டபிள்யூ. ஆனார். முதலில் நடுவர் விரலை உயர்த்த மறுத்தார். பிறகு டி.ஆர்.எஸ்.-ன்படி அப்பீல் செய்து சாதகமான தீர்ப்பை பெற்றார். அவரைத் தொடர்ந்து நுழைந்த முன்னாள் கேப்டன் ஸ்டீவன் சுமித் (0) ஆப்-ஸ்டம்புக்கு வெளியே சென்ற பந்தை தடுத்து ஆட முற்பட்ட போது அது பேட்டில் உரசிக்கொண்டு விக்கெட் கீப்பர் பரத்திடம் சிக்கியது. அடுத்து இறங்கிய டிராவிஸ் ஹெட்டும் (12 ரன்) நிலைக்கவில்லை.

ஆஸ்திரேலிய அணி 108 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து பரிதவித்த நிலையில் 5-வது விக்கெட்டுக்கு கவாஜாவுடன், பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப் கைகோர்த்து சரிவை தடுத்து நிறுத்தினார். சதத்தை நோக்கி முன்னேறிய கவாஜா, ஜடேஜாவின் பந்து வீச்சில் ஒரு பவுண்டரி அடித்து விட்டு, அடுத்த பந்தை திரும்பி 'ரிவர்ஸ் ஸ்வீப்' ஷாட்டாக அடித்தார். அதை லோகேஷ் ராகுல் தாவி குதித்து ஒற்றைக்கையால் பிரமாதமாக கேட்ச் செய்து பாராட்டுகளை அள்ளினார். கவாஜா 81 ரன்களில் (125 பந்து, 12 பவுண்டரி, ஒரு சிக்சர்) வெளியேறினார். 6-வது விக்கெட்டுக்கு இறங்கிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி (0) தாக்குப்பிடிக்கவில்லை.

இதன் பின்னர் ஹேன்ட்ஸ்கோம்புடன், கேப்டன் கம்மின்ஸ் இணைந்தார். அஸ்வின் பந்து வீச்சில் அடுத்தடுத்த ஓவர்களில் சிக்சர்களை பறக்க விட்ட கம்மின்ஸ், அணி 200-ஐ கடக்க உதவினார். மறுமுனையில் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹேன்ட்ஸ்கோம்ப் 5 ஆண்டுக்கு பிறகு டெஸ்டில் அரைசதத்தை பூர்த்தி செய்தார்.

ஸ்கோர் 227 ஆக உயர்ந்த போது கம்மின்ஸ் 33 ரன்களில் (59 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) ஜடேஜாவின் சுழலில் எல்.பி.டபிள்யூ. ஆனார். அதன் பிறகு ஹேன்ட்ஸ்கோம்புக்கு சரியான ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. கடைசி கட்டத்தில் முகமது ஷமி தனது கைவரிசையை காட்டினார்.

முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 78.4 ஓவர்களில் 263 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. ஹேன்ட்ஸ்கோம்ப் 72 ரன்களுடன் (142 பந்து, 9 பவுண்டரி) அவுட் ஆகாமல் இருந்தார். இந்திய தரப்பில் முகமது ஷமி 4 விக்கெட்டும், அஸ்வின், ஜடேஜா தலா 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை இந்தியா ஆடியது. மெதுவான இந்த ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சாளர்கள் வீசிய பெரும்பாலான பந்துகள் கால்முட்டிக்கு மேல் எழும்பவில்லை. இத்தகைய சவாலை கேப்டன் ரோகித் சர்மாவும் (13 ரன்), துணை கேப்டன் லோகேஷ் ராகுலும் (4 ரன்) திறம்பட சமாளித்து விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர். ஆட்ட நேர முடிவில் இந்தியா 9 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 21 ரன் எடுத்துள்ளது.

இந்த நிலையில், 2-வது நாள் ஆட்டம் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. மொத்தத்தில் சரிவில் இருந்து மீண்டு ஆஸ்திரேலியா பதிலடி கொடுக்குமா? அல்லது இந்தியாவின் சுழல் வலையில் சிக்கி மறுபடியும் சிதறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Tags:    

மேலும் செய்திகள்