தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட்; பிரசித் கிருஷ்ணா, அஸ்வினுக்கு பதிலாக இவர்களை களம் இறக்குங்கள் - இர்பான் பதான்

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.

Update: 2024-01-01 19:40 GMT

மும்பை,

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த தோல்வியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் பெரும் சரிவை சந்தித்தது.

இதையடுத்து முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்திக்க மோசமான பந்துவீச்சே காரணம் என்பதனால் அணியில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என பல்வேறு முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் பிரசித் கிருஷ்ணா, அஸ்வினுக்கு பதிலாக ஜடேஜா மற்றும் முகேஷ் குமாரை களம் இறக்கலாம் என இந்திய முன்னாள் வீரர் இர்பான் பதான் தனது கருத்தை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

2வது போட்டியில் ஜடேஜா விளையாடும் அளவிற்கு உடற்தகுதியுடன் இருந்தால் அஸ்வின் வெளியேற்றப்பட்டு ஜடேஜா விளையாட வேண்டும். ஏழாவது இடத்தில் பேட்டிங் செய்யக்கூடிய ஜடேஜா பின்வரிசையில் ரன் குவிப்பிற்கு கை கொடுப்பார். அதோடு பவுலிங்கிலும் அவரால் சிறப்பாக செயல்பட முடியும்.

மேலும் பிரசித் கிருஷ்ணாவிற்கு பதிலாக முகேஷ் குமாரை கொண்டு வர வேண்டும். ஏனெனில் பிரசித் கிருஷ்ணா முதல் போட்டியின் போது மிகவும் மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். ஒருவேளை அவர் வலைப்பயிற்சியில் சிறப்பாக பந்து வீசினால் ரோகித் அவரை அணியில் நீடிக்க வைக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்