ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 100 பேரை ஸ்டம்பிங் செய்து வரலாறு படைத்தார், டோனி

இலங்கைக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹலின் பந்து வீச்சில் அகிலா தனஞ்ஜெயா (4 ரன்) விக்கெட் கீப்பர் டோனியால் ஸ்டம்பிங் செய்யப்பட்டார்.

Update: 2017-09-03 21:24 GMT

கொழும்பு,

இலங்கைக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹலின் பந்து வீச்சில் அகிலா தனஞ்ஜெயா (4 ரன்) விக்கெட் கீப்பர் டோனியால் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். டோனிக்கு இது 100–வது ஸ்டம்பிங் ஆகும். இதன் மூலம் 46 ஆண்டுகால ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் 100 பேரை ஸ்டம்பிங் செய்த முதல் விக்கெட் கீப்பர் என்ற வரலாற்று சாதனையை டோனி நிகழ்த்தினார். இதற்கு முன்பு அதிகபட்சமாக இலங்கையின் சங்கக்கரா 98 பேரை ஸ்டம்பிங் முறையில் சாய்த்து இருந்தார். டோனிக்கு இந்திய கிரிக்கெட் வாரியம், சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் வாழ்த்து தெரிவித்துள்ளது.

36 வயதான டோனி இதுவரை 301 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 100 ஸ்டம்பிங் செய்திருப்பதுடன் 283 பேரை கேட்ச் முறையிலும் ஆட்டம் இழக்கச் செய்திருக்கிறார். ஒட்டுமொத்தத்தில் அதிக பேரை ஆட்டம் இழக்கச்செய்த (கேட்ச் மற்றும் ஸ்டம்பிங் இரண்டையும் சேர்த்து) விக்கெட் கீப்பர் வரிசையில் சங்கக்கரா (383 கேட்ச் மற்றும் 98 ஸ்டம்பிங்) முதலிடத்தில் இருக்கிறார். இந்த வரிசையில் டோனி 4–வது இடம் வகிக்கிறார்.

ஒரு நாள் போட்டியில் அதிக ஸ்டம்பிங் செய்த டாப்–6 விக்கெட் கீப்பர்கள் விவரம் வருமாறு:–

வீரர் நாடு ஆட்டம் ஸ்டம்பிங்

டோனி இந்தியா 301 100

சங்கக்கரா இலங்கை 404 98

கலுவிதரனா இலங்கை 189 75

மொயின்கான் பாகிஸ்தான் 219 73

கில்கிறிஸ்ட் ஆஸ்திரேலியா 287 55

நயன் மோங்கியா இந்தியா 140 44

மேலும் செய்திகள்