முதல் டி20: வங்காளதேச அணியை எளிதில் வீழ்த்தி இந்தியா அசத்தல் வெற்றி
இந்திய அணி 11.5 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் குவித்தது.;
குவாலியர்,
வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் இன்று தொடங்கியது.
இதன்படி குவாலியரில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய லிட்டன் தாஸ்(4) மற்றும் பர்வேஸ் ஹுசைன்(8) ஆகியோரின் விக்கெட்டுகளை அர்ஷ்தீப் சிங் வீழ்த்தினார்.
கேப்டன் நஜ்முல் ஹுசைன் 27 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்தவர்களும் சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேறியதால், வங்காளதேச அணியின் ரன் ரேட் வெகுவாக குறைந்தது. சற்று நிதானமாக ஆடிய மெஹ்டி ஹசன் 35 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
இறுதியில் வங்காளதேச அணி 19.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்கள் எடுத்தது. இந்திய அணி சார்பில் அர்ஷ்தீப் சிங் மற்றும் வருண் சக்கரவர்த்தி தலா 3 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்ட்யா, மயங்க் யாதவ் மற்றும் வாஷிங்டன் சுந்தர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். தொடர்ந்து 128 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா களமிறங்கினர். இதில் அபிஷேக் வர்மா 16 ரன்களில் ரன் அவுட் ஆனார். 6 பவுண்டரிகளை விளாசிய சஞ்சு சாம்சன் 29 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். கேப்டன் சூர்யகுமார் யாதவ் 29 ரன்களில் கேட்ச் ஆனார். ஹர்திக் பாண்ட்யா(39) மற்றும் நிதிஷ் ரெட்டி(16) இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இறுதியில் 11.5 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் குவித்த இந்திய அணி, வங்காளதேசத்தை எளிதில் வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.