18ம் ஜெர்சி.. 18ம் நாள்.. 18-வது ஓவர்- அன்று நடந்த அதே மேஜிக் நேற்றும்..! கோலியின் அறியப்படாத ஜெர்சி '18' ரகசியங்கள்..!
ஐதராபாத் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் விராட் கோலி அபார சதமடித்து அசத்தினார்.
ஐதராபாத்,
ரசிகர்களுக்கு எப்போதுமே ஜெர்சி நம்பர்கள் மேல் ஒரு மையல் இருக்கும். அவை வெறும் நம்பர்கள் அல்ல. அவர்கள் மதிக்கும் ஆதர்ச நாயகன்கள், அசகாய சூரன்களின் சாகசங்களைப் பொத்தி வைத்திருக்கும் தங்க புதையல். அவர்களோடு இரண்டர கலந்த உயிரும் உணர்வும். நம்பர் 10, 7. இது இரண்டும் நம்பர்கள் அல்ல. இரண்டு தலைமுறைகளின் கடைசி நம்பிக்கை. இதற்கு நடுவே நம்பர் '18'-ஐ தாங்கிய 'விராட் கோலி' எனும் ஆக்ரோஷ புயலை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. அந்த நம்பர் எப்படி வந்தது? எப்படி அவர் வாழ்வை மாற்றியது?
பொதுவாக, ஒவ்வொரு நம்பருக்குப் பின்னும் ஒரு கதை இருக்கும். கோலியின் கதை சற்று வித்தியாசமானது. சச்சினும் தோனியும் ஜெர்சி நம்பரை அவர்களே தேடிக் கொண்டார்கள். ஆனால் நம்பர் 18-ஓ விராட்டை தேடி வந்தது. அவர் கேட்காமலே நம்பர் 18 ஜெர்சி வழங்கப்பட்டது. பின்னாளில் அந்த நம்பரே அவர் வாழ்வில் முக்கிய நாட்களாகவும் மாறிப் போனதாக கோலியே கூறியிருக்கிறார். ஆம், கோலி இந்திய அணிக்காக முதன்முதலில் ஆடிய நாள் ஆகஸ்ட் 18, 2008. கோலியின் உயிருக்கு உயிரான தந்தை காலமானது டிசம்பர் 18, 2006. இது அவரின் கிரிக்கெட் வாழ்வை புரட்டி போட்ட நாள்.
16 வயதில் கோலி ரஞ்சி போட்டியில் ஆடி கொண்டிருக்க, போட்டி நடுவே தந்தை உயிர் பிரிந்தது. அடக்கம் கூட செய்யாமல் விளையாடினார். அந்த அர்ப்பணிப்புக்கு பெயர் தான் கோலி. இதையெல்லாம் இப்போது சொல்ல காரணம், ஐதராபாத்துக்கு எதிரான நேற்றைய போட்டியில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்கள் தான். நேற்றைய தேதி மே 18. ஐதராபாத்துடன் ஆர்சிபி அணிக்கு முக்கியமான போட்டி. 187 என்ற சற்று கடினமான இலக்கு. ஆர்சிபி பிளேஆப் செல்ல கட்டாயம் வென்றாக வேண்டிய போட்டி வேறு.
சேசிங்கில் மாஸ்டரான கோலி, ரசிகர்கள் நினைத்த படியே நேற்றைய போட்டியில் அடித்து நொறுக்கினார். பந்து நாலாபுறமும் சிதற, பவுலர்களுக்கு மைதானத்தையே சுற்றி சுற்றி காண்பித்தார். ஸ்டிரைக் ரேட்டை வைத்து கேலி செய்தவர்களுக்கெல்லாம் ஒவ்வொரு அடியும் நெத்தியடி தான். அதுவும் 103 மீட்டர் சிக்ஸரை பார்த்து எதிரணியினரே வாய் பிளந்தனர்.
பீஸ்ட் மோடில் கோலி ஆட, 18ம் ஓவரில் அந்த அற்புதமான சதமும் வந்து சேர்ந்தது. வெற்றிகரமான சேஸிங்காகவும் முடிந்தது. கோலியின் வெறித்தனமான பார்ம் மீண்டும் உயிர்த்தெழ, பிளேஆப்பில் ஆர்சிபி உயிரை தக்க வைத்தது. இதனை 18ம் தேதியில் 18ம் ஓவரில் 18ம் நம்பரின் சதம் என பதிவிட்டு ரசிகர்கள் கோலியை கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.
இது ஒருபுறமிருக்க, சரியாக ஏழு வருடங்களுக்கு முன் 2016 , மே 18ல் பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் கோலி அட்டகாசமான சதமடித்திருந்தார். அன்று நடந்த அதே மேஜிக் நேற்றும் நடந்திருப்பதாகவும் கூறி ரசிகர்கள் பண்டிகையை கொண்டாடி வருகிறார்கள்.
எது எப்படியோ, தெரிந்தோ தெரியாமலோ, அறிந்தோ அறியாமலோ, தற்செயலாகவோ கடவுள் செயலாகவோ 18ம் தேதி இந்த போர்கொண்ட சிங்கத்துக்கு மறக்க முடியாத நினைவுகளை கொடுத்துவிட்டு செல்வதை மறுப்பதற்கில்லை.