தமிழக காடுகளில் புலிகள் எண்ணிக்கை உயர்வு

கடந்த மாதம் 29–ந்தேதி உலகம் முழுவதும் சர்வதேச புலிகள் தினமாக கடைப்பிடிக்கப்பட்டது.

Update: 2019-08-01 22:00 GMT
2006–ம் ஆண்டு முதல், நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தியாவில் காடுகளில் உள்ள புலிகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், 4–வது புலிகள் கணக்கெடுப்பு அறிக்கையை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ளார். இந்தியா முழுவதும் 2,967 புலிகள் இருப்பது கணக்கிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள வனப்பகுதிகளில் 264 புலிகள் இருப்பது கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த 2014–ம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பில் இருந்த புலிகளைவிட, இது 15 சதவீதம் அதிகமாகும். தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், கோவை–திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகம், நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் என 4 புலிகள் காப்பகங்களில் புலிகளையும், அவற்றின் வாழ்விடங்களையும் பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த 4 புலிகள் காப்பகங்களுமே ‘‘மிக நன்று’’ என்ற தரச்சான்றிதழை பெற்றுள்ளது மிகவும் சிறப்புக்குரியது. அதிலும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஆண்டுதோறும் புலிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கிறது என்ற கணக்கீட்டில், இந்தியாவிலேயே சிறந்த செயல்பாட்டுக்கான சிறப்பு விருதை பிரதமர் நரேந்திர மோடி வழங்க, சத்தியமங்கலம் புலிகள் காப்பக மண்டல காப்பாளர் நாகநாதன் பெற்றுக்கொண்டது தமிழ்நாட்டுக்கே மிகவும் பெருமை அளிக்கும் ஒன்றாகும்.

புலிகளின் எண்ணிக்கை சாதாரணமாக உயர்ந்துவிடுவதில்லை. அடர்ந்த காடுகளே செழித்த நாட்டை உருவாக்குகிறது. அடர்த்தியான மரங்கள் இருந்தால் மழை பொழிந்து, மண்ணில் சங்கமமாகி அருவியாக பெருக்கெடுத்து ஓடையாக ஓடி, ஆறாக மாறி, மண்ணில் மருதாணி தடவுகிறது. இந்த காடுகள் சிறப்பாக இருக்க வன உயிர்கள் அவசியம். தாவர உண்ணிகள், மாமிச உண்ணிகள், பறவைகள், பூச்சிகள், பூஞ்சான்கள் ஆகிய அனைத்துமே காடுகள் செழிக்க காரணமாகின்றன. இந்தியாவை பொறுத்தவரை, சுற்றுச்சூழல் தொகுதியின் உச்சமாக இருப்பது புலியினம். புலிகள் அதிகமாக இருந்தால் மான்களும் இருக்கும், வரையாடுகளும் இருக்கும், யானைகளும் இருக்கும், கழுதை புலிகளும் இருக்கும், காட்டு பன்றிகளும் இருக்கும், மரங்களும் இருக்கும். தாவர உண்ணிகள் மட்டும் அதிகமாக இருந்தால் வனமே அழிந்துவிடும். அதை கட்டுப்படுத்துவதும், ஆரோக்கியமான தாவர உண்ணிகளை உலவவிடுவதும் புலிகளால் நிகழ்கிறது. எனவே, புலிகளின் எண்ணிக்கை அதிகரித்தால், ஒட்டுமொத்த வனமும் செழிக்கிறது என்று பொருள். 

அந்த வகையில், தமிழ்நாட்டில் வனம் செழிக்கிறது என்று ஒருபக்கம் மகிழ்வுற்றாலும், மத்தியபிரதேசம், கர்நாடகம், உத்தரகாண்ட், மராட்டியம் ஆகிய மாநிலங்களில் உள்ள காடுகளில் புலிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதை கணக்கிடும்போது, நாம் போகவேண்டிய பாதை இன்னும் இருக்கிறது என்பது புலனாகிறது. தமிழ்நாட்டில் தேனி மாவட்டம் மேகமலையில் இருந்து விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள அணில் சரணாலயம் வரை உள்ள பகுதிகளை 5–வது புலிகள் காப்பகமாக அறிவிப்பதற்கான முயற்சிகளை தீவிரமாக எடுக்கவேண்டும். இன்னும் அடர்ந்த காடுகளாக நமது வனப்பகுதிகளை மாற்றும் நடவடிக்கைகளை எடுத்து, வனங்கள் வனவாழ் உயிரினங்கள் வாழும் பகுதியாக மட்டும் இருக்கும்படி மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்