தகுதிக்கு ஏற்ற பதவிகள்

மறைந்த போலீஸ் டி.ஜி.பி. ஸ்ரீபால், எப்போதுமே இரவு ரோந்து செல்லும் போலீசாருக்கு ஒரு அறிவுரை கூறுவார்.

Update: 2017-07-03 20:30 GMT
றைந்த போலீஸ் டி.ஜி.பி. ஸ்ரீபால், எப்போதுமே இரவு ரோந்து செல்லும் போலீசாருக்கு ஒரு அறிவுரை கூறுவார். ‘‘இரவு நீங்கள் ரோந்து செல்லும்போது ஊதும் ‘விசில்’ சத்தமும், லத்தியால் அடிக்கும் சத்தமும், திருடவேண்டும் என்று நினைத்து வருபவர்களுக்கு ஒரு அச்சத்தையும், எச்சரிக்கையையும் கொடுக்கும். அதற்கும் மேலாக தூங்கிக் கொண்டிருக்கும் பொதுமக்களுக்கு, நம்மை பாதுகாக்க இரவு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார், நாம் தூங்க வேண்டும் என்பதற்காக விழிப்புடன் பணியாற்றுகிறார்கள் என்ற நம்பிக்கையுடன் நிம்மதியாக தூங்குவார்கள்’’ என்று கூறுவார். அதுபோல, ஒரு சமுதாயம் அமைதியாக வாழ வேண்டும், பாதுகாப்புடன் வாழவேண்டும், சட்டம்–ஒழுங்கு பராமரிக்கப்பட வேண்டும் என்பதெல்லாம் காவல் துறையின் கடமையிலும், அர்ப்பணிப்பு சேவையிலும்தான் இருக்கிறது.

காவல் துறையில் போலீஸ்காரர், முதல்நிலை போலீஸ்காரர், தலைமை காவலர், சப்–இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டர், உதவி போலீஸ் சூப்பிரண்டு அல்லது துணை போலீஸ் சூப்பிரண்டு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, துணை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல், இன்ஸ்பெக்டர் ஜெனரல், கூடுதல் போலீஸ் டைரக்டர் ஜெனரல், போலீஸ் டைரக்டர் ஜெனரல் என்ற பதவிகள் உண்டு. இதில், போலீஸ்காரராகவோ, சப்–இன்ஸ்பெக்டராகவோ, உதவி போலீஸ் சூப்பிரண்டு அல்லது துணை போலீஸ் சூப்பிரண்டாகவோ மட்டுமே காவல் துறையில் நேரடி நியமனம் பெறமுடியும். மற்றபதவிகள் எல்லாம், அவர்களின் அனுபவத்தின் அடிப்படையில் பெறும் பதவி உயர்வால்தான் கிடைக்கும். இத்தகைய பதவி உயர்வுகள் எல்லாம், தகுதியுள்ளவர்களுக்கும் கிடைக்கும். அனுபவத்தின் அடிப்படையில் தகுதியில்லாதவர்களுக்கும் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. இந்த நிலையை மாற்றுவதற்கு அதிகாரிகள் மட்டத்தில், அதிலும் குறிப்பாக ஐ.பி.எஸ். தேர்வில் வெற்றிபெற்று காவல் துறையில் நுழையும் அதிகாரிகளுக்கு பதவி உயர்வுக்கு ஒரு திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.

ஒவ்வொரு கட்டத்திலும், பதவி உயர்வுபெறும் முன்பு, அதிகாரிகள் சில குறிப்பிட்ட பணிகளில் நிபுணத்துவம் பெற்றிருக்கவேண்டும். எடுத்துக்காட்டாக, போலீஸ் சூப்பிரண்டுகள், லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு, போலீஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, குற்றப்புலனாய்வு, உளவுப்பிரிவு, கணினி குற்றம், கள்ளநோட்டு தடுப்பு, தீவிரவாத தடுப்பு போன்றவற்றில், ஏதாவது ஒரு பணியில் நிபுணத்துவம் பெற்று, இதில் ஏதாவது ஒரு குற்றத்தடுப்பு பயிற்சியில் ஈடுபட்டபிறகுதான், துணை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரலாக பதவி உயர்வு பெறவேண்டும். இதுபோல, டி.ஐ.ஜி.யில் இருந்து ஐ.ஜி. பதவி உயர்வுக்கு முன்பும், ஐ.ஜி. பதவியில் இருந்து கூடுதல் போலீஸ் டைரக்டர் ஜெனரல் பதவி உயர்வுக்கு முன்பும், இதில் 2 அல்லது 3 குற்றத் தடுப்புகள் தொடர்பான பயிற்சிக்கு சென்று முடித்திருக்கவேண்டும்.

ஐதராபாத்தில் உள்ள தேசிய போலீஸ் அகாடமி, இதுதொடர்பான பயிற்சித் திட்டங்களை வகுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தத்திட்டம், ஏற்கனவே கடந்த நவம்பர் மாதம் ஐதராபாத்தில் நடந்த அகில இந்திய உயர் போலீஸ் அதிகாரிகள் மாநாட்டில், பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் கலந்து கொண்ட நேரத்தில் விவாதிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாகத்தான் மத்திய அரசாங்கம் இந்த திட்டத்தை இப்போது தீட்டியுள்ளது. இது மிகவும் நல்ல திட்டம். உடனடியாக அமலுக்கு வரவேண்டிய திட்டம். இதை ஐ.பி.எஸ். அதிகாரிகள் மட்டத்தோடு நிறுத்திவிடாமல், கீழ்மட்டத்தில் இருந்தே, அதாவது போலீஸ்காரரில் தொடங்கி, மாநில அரசு காவல் பணியில் இருக்கும் அனைவருக்கும் செயல்படுத்தவேண்டும். பணியாற்றும் ஆண்டுகளை மட்டும் கணக்கிடாமல், அவர்களின் பணிக்காலத்தில் வெளிப்படுத்திய ஆற்றல்களையும், லஞ்சம், ஊழல் இல்லாமல் மேற்கொண்ட தூய்மைப் பணியையும் மட்டும் கருத்தில்கொண்டு பதவி உயர்வுகள் அளித்தால், காவல் துறை இன்னும் சிறப்பாக ஒளிவிடும்.

மேலும் செய்திகள்