திருப்பதி நவம்பர் மாத தரிசன டிக்கெட் வெளியீடு எப்போது? தேவஸ்தானம் அறிவிப்பு

300 ரூபாய் சிறப்பு கட்டண தரிசனத்துக்கான டிக்கெட்டுகள் 24-ம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும்.

Update: 2024-08-13 12:51 GMT

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 3 மாதங்களுக்கு முன்பே தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். அவ்வகையில், நவம்பர் மாதம் சாமி தரிசனம் செய்வதற்கான டிக்கெட்டுகளை ஆன்லைனில் வெளியிடும் தேதியை திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. தரிசன டிக்கெட் தவிர தங்குமிடம் மற்றும் தன்னார்வ சேவைக்கான ஆன்லைன் ஒதுக்கீட்டையும் வெளியிட உள்ளது. வரும் 19-ம் தேதி முதல் டிக்கெட்டுகள் வெளியிடப்படுகின்றன.

இதுதொடர்பாக திருமலை தேவஸ்தானம் கூறியிருப்பதாவது:-

வரும் 19-ம் தேதி காலை 10 மணி முதல் 21-ம் தேதி காலை 10 மணி வரை, குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை உள்ளிட்ட சேவைகளுக்கான மின்னணு டிக்கெட்டுகளுக்கு பதிவு செய்யலாம். குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் பக்தர்கள் பணம் செலுத்தி டிக்கெட்டுகளை பெற்றுக்கொண்டு, அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தேதியில் சேவைகளில் கலந்துகொள்ளலாம்.

கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவைகளுக்கான டிக்கெட்டுகள் 22-ம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.  மெய்நிகர் சேவை டிக்கெட்டுகள் அதே நாளில் மாலை 3 மணிக்கு வெளியிடப்படும்.

அங்கப்பிரதட்சணம் செய்வதற்கான டோக்கன்கள் வரும் 23-ம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும். ஸ்ரீவாணி அறக்கட்டளை நன்கொடையாளர்களுக்கான வி.ஐ.பி. தரிசன டிக்கெட் மற்றும் அறைகள் முன்பதிவு டிக்கெட்டுகள் 23-ம் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படும்.

மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களுக்கான டிக்கெட்டுகள் 23-ம் தேதி மாலை 3 மணிக்கும், 300 ரூபாய் சிறப்பு கட்டண தரிசனத்துக்கான டிக்கெட்டுகள் 24-ம் தேதி காலை 10 மணிக்கும் வெளியிடப்படும்.

இதேபோல் திருமலை மற்றும் திருப்பதியில் அறைகள் முன்பதிவுக்கான டிக்கெட் 24-ம் தேதி மாலை 3 மணிக்கு வெளியிடப்படும்.

பக்தர்கள் தங்களுக்கு தேவையான தரிசன டிக்கெட்டுகள், அறைகளை தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் மட்டுமே (ttdevasthanams.ap.gov.in) முன்பதிவு செய்து கொள்ளுமாறு தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது. 

மேலும் ஆன்மிக செய்திகளுக்கு.. https://www.dailythanthi.com/Others/Devotional

Tags:    

மேலும் செய்திகள்