திருக்கோளூர் பெண் பிள்ளை ரகசியம்
ராமானுஜரிடம் திருக்கோளூர் பெண் வெளிப்படையாக கூறிய வார்த்தைகள் மிகவும் தத்துவார்த்தம் பொருந்தியவை என்பதால், அவை திருக்கோளூர் பெண் பிள்ளை ரகசியம் என்று போற்றப்படுகிறது.;
தூத்துக்குடி மாவட்டம், தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ளது திருக்கோளூர். இந்த ஊரில் வைத்தமாநிதி பெருமாள் கோவில் அமைந்துள்ளது. ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இந்த கோவில், நவதிருப்பதி ஸ்தலங்களில் 3-வது திருத்தலம் ஆகும். நவக்கிரகங்களில் இது செவ்வாய் ஸ்தலமாகும். இங்கு வைத்தமாநிதி பெருமாள் மூலவராக கிழக்கு நோக்கி சயனக் கோலத்தில் வீற்றிருக்கிறார். தாயார் குமுதவல்லி, கோளுர் வல்லி. பார்வதியின் சாபத்தால் நவநிதிகளையும் இழந்த குபேரன், இத்தலத்து பெருமாளை வழிபட்டு மீண்டும் நவநிதிகளை பெற்றான் என புராணங்கள் கூறுகின்றன.
இத்தனை சிறப்பு வாய்ந்த திருக்கோளூரில் வாழ்வதை பெருமையாக கூறும் திருக்கோளூர் பெண் பிள்ளை ரகசியம் என்ற சிறப்பான பாடல் தொகுப்பு உள்ளது. சுவாமி ராமானுஜரைப் பார்த்து, மோர் விற்கும் பெண் கேட்ட 81 கேள்விகள் தான் இந்த திருக்கோளூர் பெண் பிள்ளை ரகசியம். இந்த 81 கேள்விகளும் 81 பாடல்களாக தொகுக்கப்பட்டுள்ளன. இவை ஒவ்வொன்றிற்கு பின்னாலும் ராமாயணம், மகாபாரதம், பகவத் கீதை போன்ற புராண இதிகாசங்களுடன் தொடர்புடைய ஒரு கதை உள்ளது.
புண்ணிய தலமான திருக்கோளூரில் வசித்து வந்த பெண் ஒருவர், இந்த ஊரை விட்டு மூட்டை முடிச்சுகளுடன் வெளியூர் புறப்பட்டுக்கொண்டிருந்தார். அப்போது, வைத்தமாநிதி பெருமாளை தரிசிப்பதற்காக திருக்கோளூர் வந்த சுவாமி ராமானுஜர், அந்த பெண்ணிடம் காரணத்தை கேட்டார். 'புகும் ஊர்' என்று போற்றப்படும் இந்த திருக்கோளூரை விட்டு நீ வெளியே செல்வதற்கான காரணம் என்ன" என்று ராமானுஜர் கேட்டார். அதுவும், பெண்கள் புகும் ஊர் (இளமான் புகும் ஊர்) என்றாரே ஆழ்வார், பெண்கள் 'வெளியே செல்லும் ஊர்' என்று சொல்லவே இல்லையே என்று விசாரிக்கிறார்.
அதற்கு பதில் அளித்த அந்த பெண், 'சுவாமி.. முயற்புழுக்கை வரப்பில் இருந்தால் என்ன? வயலில் இருந்தால் என்ன? ஞானமற்ற நான் எங்கிருந்தால் என்ன?' என விரக்தியுடன் பதில் அளித்தாள்.
அத்துடன், 81 வைஷ்ணவ அடியார்களின் பக்தி மற்றும் அருஞ்செயல்களை கேள்விகளாக வினவி, 'அவர்களைப் போன்ற பக்தி ஏதும் நான் செய்யவில்லையே?' என்று கூறி வருந்தினாள்.
'அழைத்து வருகிறேன் என்றேனோ அக்குரூரரைப் போலே?', 'அகம் ஒழித்து விட்டேனோ விதுரரைப் போலே?' எனத் தொடங்கி 'துறைவேறு செய்தேனோ பகவரைப் போலே' என முடியும் 81 வாக்கியங்களை கூறி, அப்பேர்ப்பட்ட பாக்கியம் கிடைக்கப்பெற்ற பெண் நான் அல்ல, எனவே ஊரைவிட்டு போகிறேன்.. என்று அந்தப் பெண் சாதாரணமாக கூறுகிறார்.
ஆனால், அந்த பெண் பேசிய ஒவ்வொரு வாக்கியமும், பகவான் மீதான சிறந்த பக்தியையும் ஞானத்தையும் வெளிப்படுத்தியது. 'இப்படி தத்துவார்த்தமாக பேசும் நீ கண்டிப்பாக திருக்கோளூரில் இருக்க வேண்டியவள்தான்' என்று கூறிய ராமானுஜர், அந்த பெண்ணை ஊருக்குள் அழைத்துச் சென்று வைத்தமாநிதி பெருமாளை தரிசனம் செய்தார். பின்னாளில் அந்தப் பெண்ணை தன் சீடராக்கிக் கொள்கிறார்.
ராமானுஜரிடம் திருக்கோளூர் பெண் கூறிய வாசகங்களின் மறைப்பொருளை கொண்ட நூல் 'திருக்கோளூர் பெண்பிள்ளை ரகஸ்யம்'. இது வைஷ்ண ரகஸ்ய கிரந்தங்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது. இவை வெளிப்படையாக அந்த பெண் சொன்ன வார்த்தைகள்தான். ஆனால் மிகவும் தத்துவார்த்தம் பொருந்தியவை என்பதால் ரகசியம் என்று போற்றப்படுகிறது.
மேலும் ஆன்மிக செய்திகளுக்கு.. https://www.dailythanthi.com/Others/Devotional