ஈஷாவில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட தமிழ் புத்தாண்டு!
சூர்யகுண்டம் மண்டபம் முன்பு ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
வசந்த காலத்தின் தொடக்கத்தை வரவேற்கும் விதமாக ஒவ்வொரு மாநிலங்களிலும் புத்தாண்டு விழா கொண்டாடப்படுவது வழக்கம். தமிழ்நாட்டில் தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படும் அதே வேளையில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, பஞ்சாப், மகாராஷ்டிரா, காஷ்மீர், மேற்கு வங்காளம், அசாம் ஆகிய மாநிலங்களிலும் பல்வேறு பெயர்களில் இப்புத்தாண்டு விழா கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் ஈஷாவில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி தமிழ் புத்தாண்டை கோலாகலமாக கொண்டாடினர். மேலும் சூர்யகுண்டம் மண்டபம் முன்பு நடைபெற்ற ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்களின் நாட்டுபுற இசை, நடனம் மற்றும் களரிபயட்டு போன்ற கலை நிகழ்ச்சிகள், தமிழ் கலாச்சாரம் உள்ளிட்ட தேசத்தின் பல்வேறு மாநிலங்களின் கலாச்சார அம்சங்களை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருந்தது.
மேலும் ஈஷாவை சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கான கிராம மக்கள் தேவி திருமேனியுடன் கூடிய ரதத்துடன் மலைவாசலில் இருந்து லிங்க பைரவி கோவில் வரை ஊர்வலம் வந்தனர். மேலும் அவர்கள் பல வகையான பழங்களை தேவிக்கு அர்ப்பணம் செய்து வழிபட்டனர். பின்னர் லிங்கபைரவியில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
தமிழ் புத்தாண்டு தினத்தில் பல்வேறு மாநிலங்களில் இருந்து மக்கள் ஆதியோகியை காண பெருந்திரளாக திரண்டிருந்தனர். அத்துடன் ஆதியோகி திவ்ய தரிசனம் என்ற ஒலி - ஒளிக் காட்சியை ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு ரசித்தனர்.