ஆன்மீகம்- சந்தேகம் தெளிவோம்

ஆகம விதிகளின்படி, பிரசாதங்களை கோவில்களில் உள்ள மடப்பள்ளியில் தான் தயாரிக்க வேண்டும்.

Update: 2023-09-22 10:51 GMT

கேள்வி:- அனைத்துத் தெய்வங்களுக்கும் வாகனங்கள் இருக்க சிவனின் நந்தியும், பெருமாளின் கருடனும் தனிச்சிறப்பு பெற என்ன காரணம்? (சங்கீத சரவணன், மயிலாடுதுறை)

பதில்:- நந்தி பகவானும், கருட பகவானும் வேத வடிவங்கள். தர்மத்தின், அதாவது அறத்தின் வடிவங்கள். வேத நூல்கள், மறை நூல்கள் என்பது அற நூல்கள். அந்த அற நூல்களில் சொன்னபடி நடந்தால், நம் நற்செயல்கள் வாகனமாக இருந்து, இறைவனின் முன்பாக நம்மைக் கொண்டு போய் நிறுத்தும் என, `ஆடி நாடு தேடினும்' எனும் பாடலில், சிவ வாக்கியர் பாடியிருக்கிறார்.

கேள்வி:- கோவில்களில் இறைவனுக்குப் படைக்கப்படும் பிரசாதங்கள், மடப்பள்ளியில் தயாரிக்கக் காரணம் என்ன? வெளியில் இருந்து தயாரித்து கோவிலுக்கு கொண்டுவரக் கூடாதா? (அ.மங்கைச்செல்வி, கோவை)

பதில்:- கூடாது. ஆகம விதிகளின்படி, பிரசாதங்களை கோவில்களில் உள்ள மடப்பள்ளியில் தான் தயாரிக்க வேண்டும். விதி-சட்டம் என்று இருந்தால், அதன்படி தான் நடக்க வேண்டுமே தவிர, அதை மீற முயலக்கூடாது. பெரிய பதவிகளில் உள்ளவர்களை, நாம்தான் தேர்ந்தெடுத்து அந்தப் பதவியில் அமர்த்தினோம். அதற்காக, நம் இஷ்டப்படி, விருப்பப்படி, 'நான் ஓட்டுப்போட்டு தானே, நீ வந்தாய்!' என்று சொல்லி, அவர்களை நம் இஷ்டப்படி வளைக்க முயலக்கூடாது. அது போலத்தான், மடப்பள்ளியில் பிரசாதம் தயாரிப்பதும், மேலும், வீட்டில் பிரசாதங்கள் தயாரித்துக் கொண்டு வருகையில், வழியில் ஏதேனும் இடையூறு ஏற்படலாம்; கால தாமதம் ஏற்படலாம்; அதன் காரணமாக உரிய காலத்தில் நடக்கவேண்டிய பூஜையும் தாமதமாகலாம். ஆனால், மடப்பள்ளியில் பிரசாதம் தயாரித்து, அதை அப்படியே சன்னிதிக்குக் கொண்டுபோய் விடலாம். இவ்வாறு பல காரணங்களுக்காகத்தான், மடப்பள்ளியில் பிரசாதம் தயாரிப்பது என்று வைத்தார்கள்.

கேள்வி:- காவடி எடுப்பதன் காரணம் என்ன? (ப.சுரேஷ், தஞ்சாவூர்)

பதில்:- கா- என்பதற்கு `காவல் செய்!'; `பாதுகாப்பு' என அகராதிகள் பொருள் கூறுகின்றன. அதன்படி, 'தெய்வமே! உன் திருவடியில் பக்தி கொண்ட எங்களைக் `கா' (காப்பாற்று) என்பதே, காவடி எடுப்பதன் விளக்கம்.

கேள்வி:- அனுமனை, சிவபெருமானின் அவதாரம் என்று சொல்வது சரியா? (க.அசோக், மதுரவாயல்)

பதில்:- மூல நூல்களில் இல்லாத, சொல்லப்படாத தகவல் இது. கம்ப ராமாயணத்தில் திரு அவதாரப் படலத்தில், 'வாயு மற்று எனது கூறு மாருதி எனலும்' என்று தான் உள்ளது. வால்மீகி ராமாயணம் சொல்லும் தகவலும் இதுவே! வாயுவின் பிள்ளை அனுமன், வாயு புத்திரன் என்றுதான் இரு நூல்களும் சொல்கின்றனவே தவிர, சிவன் பிள்ளை, சிவ புத்திரன், சிவ அவதாரம் என்று அனுமனைச் சொல்லவில்லை.

கேள்வி:- வீட்டில் எருக்கன் செடியை வளர்க்கலாமா? (ஆர்.ஜெயந்தி ராஜன், சிவகாசி)

பதில்:- கூடாது.

கேள்வி:- சிவபெருமானை `தென்னாடுடைய சிவனே' என்று அழைப்பது ஏன்? (சி.யாழினி, கடலூர்)

பதில்:-கயிலாயத்தில் எழுந்தருளி இருக்கும் சிவபெருமான், தென் முகமாகவே நாட்டத்தைக் கொண்டிருக்கிறார். அதனால், 'தென்னாடுடைய சிவனே போற்றி!' என்கிறோம். அடுத்தது; சிவபெருமானின் திருவிளையாடல்களில் பலவும், தென்னாட்டில் நிகழ்ந்ததாக ஞான நூல்கள் கூறுகின்றன. அதன் காரணமாகவும், 'தென்னாடுடைய சிவனே போற்றி!' என்று சொல்கிறோம். தென்முகக்கடவுளாக விளங்குபவர் தட்சிணாமூர்த்தி. சிவபெருமானின் அந்த வடிவம், ஞான வடிவம்; ஞானத்தை அருள்வது. அது தென்முகமாக நாட்டத்தைக் கொண்டிருக்கும். அதனாலும், 'தென்னாடுடைய சிவனே போற்றி!' என்கிறோம்.

Tags:    

மேலும் செய்திகள்