களைகட்டியது ஆடி அமாவாசை விழா.. சதுரகிரியில் பக்தர்களின் வருகை அதிகரிப்பு

ஆடி அமாவாசை விழாவை முன்னிட்டு நேற்று முதல் 5-ந்தேதி வரை 5 நாட்கள் பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Update: 2024-08-02 16:28 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகத்தில் சித்தர் மலை என போற்றப்படும் சதுரகிரி மலை உள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. இக்கோவிலில் நாளை மறுநாள் (4-ந் தேதி) ஆடி அமாவாசை விழா கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் சுவாமிக்கு பல்வேறு வகையான மங்கல பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடைபெறும்.

அமாவாசை தினத்தன்று சாமி தரிசனம் செய்வதற்காக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி கோவிலுக்கு வருவார்கள். தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

ஆடி அமாவாசை விழாவை முன்னிட்டு நேற்று முதல் 5-ந்தேதி வரை 5 நாட்கள் பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து பக்தர்களின் வருகை அதிகரிக்கத் தொடங்கியது. நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை சுமார் 7 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.

தாணிப்பாறை அடிவாரப் பகுதி முதல் தாணிப்பாறை விலக்கு வரையிலும், மாவுத்து உதயகிரிநாதர் கோவில் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பக்தர்களின் நடமாட்டத்தை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

தாணிப்பாறை அடிவார பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட போலீசார், 5 தீயணைப்பு வாகனங்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் தாணிப்பாறை அடிவாரப் பகுதியில் இருந்து மலைப்பகுதிகளில் மதுரை மாவட்ட போலீசார், தீயணைப்பு துறையினர், வனத்துறையினர் நேற்று முதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

முன்னதாக பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு 18 வகையான அபிஷேக பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நோயாளிகள் மற்றும் வயதானவர்கள் மலை ஏறுவதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்