சேலம் வண்டி வேடிக்கை விழா: விதவிதமாக கடவுள் வேடம் அணிந்து மெய்சிலிர்க்க வைத்த பெண்கள்

திருவிளையாடல், மகாபாரதம், ராமாயணம் உள்ளிட்ட இதிகாசங்களை நினைவுபடுத்தும் வகையில் வண்டி வேடிக்கை நிகழ்ச்சி இடம்பெற்றிருந்தது.

Update: 2024-08-09 07:45 GMT

சேலம்:

சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலை மையமாக வைத்து அதனை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள அம்மன் ஆலயங்களில் ஆடித்திருவிழா விமரிசையாக நடைபெறும். திருவிழாவின்போது பக்தர்கள் பல்வேறு நேர்த்திக்கடனை செலுத்துவர். அதில் வண்டி வேடிக்கை நிகழ்ச்சி முக்கியத்துவம் வாய்ந்தது. இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் கடவுள் போன்று வேடமிட்டு தங்களது நேர்த்திக் கடனை செலுத்துவது வழக்கம்.

அந்த வகையில் சேலம் குகை மாரியம்மன் கோவில், காளியம்மன் கோவில் உள்பட மாவட்டத்தில் உள்ள பல்வேறு அம்மன் கோவில்களில் நேற்று வண்டி வேடிக்கை கோலாகலமாக நடைபெற்றது.

இதில் மேச்சேரி சந்தைப்பேட்டையில் சின்ன மாரியம்மன் கோவில் திருவிழாவில் நேற்று இரவு அக்னி கரகம், அலகு குத்துதல், பொய்க்கால் குதிரை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். இதையடுத்து வண்டி வேடிக்கை நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.

 

இக்கோவிலில் பெண்கள் மட்டுமே அம்மன் வேடம் அணிந்து வலம் வரும் வண்டிவேடிக்கை நிகழ்ச்சியை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பிரமாண்ட வண்டிகளில், கடவுள்களைப் போல் வேடம் அணிந்த பெண்களை அமர வைத்து ஊர்வலமாக அழைத்து வந்தனர்.

அகிலாண்டேஸ்வரி, உலகநாயகி, காமாட்சி, காலபைரவி, சத்திய சொரூபி, சரஸ்வதி தேவி, ஞானரூப தேவி, தாட்சாயணி தேவி, துர்க்கை, பகவதி, பார்வதி தேவி, மீனாட்சி, பத்ரகாளியம்மன், வேப்பிலைக்காரி, உமா தேவி, காயத்ரி தேவி, பெரிய நாயகி உள்ளிட்ட பல்வேறு அம்மன் வேடம் அணிந்து வந்தனர்.

 

இப்பெண்கள் வழிநெடுகிலும் பக்தர்களுக்கு ஆசி வழங்குவதுபோல் காட்சி தந்தனர். இது கடவுள் விண்ணுலகில் இருந்து மண்ணுலகிற்கு வந்து ஆசி வழங்குவது போல் இருந்தது. திருவிளையாடல், மகாபாரதம், ராமாயணம் உள்ளிட்ட இதிகாசங்களை நினைவுபடுத்தும் வகையில் இந்நிகழ்ச்சி இடம்பெற்றிருந்தது. வண்டியின் முன்பு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பொய்க்கால் குதிரை நாட்டியம் ஆடியபடி ஊர்வலமாக வந்தனர். 

மேலும் ஆன்மிக செய்திகளுக்கு.. https://www.dailythanthi.com/Others/Devotional

Tags:    

மேலும் செய்திகள்