மனம்போல் மாங்கல்யம் அமைய ஆடிப்பூர வழிபாடு

திருமணமாகாத பெண்கள் ஆடிப்பூர விரதம் கடைப்பிடித்து அம்மனை வழிபட்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்ற பக்தர்களால் நம்பப்படுகிறது.

Update: 2024-08-06 05:31 GMT

ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திர நாள 'ஆடிப்பூரம்' என்ற பெயரில் அம்மன் ஆலயங்கள் தோறும் கொண்டாடப்படுகிறது. ஆடி மாதத்தில் சிவனை விட அம்மனையே அதிகமாக வழிபாடு செய்வார்கள். பூமியில் அவதரித்த அம்மன், ஆடி மாதத்தில் தான் பூப்படைந்ததாகவும், சூலுக்கு தயாரானதாகவும் கூறப்படுகிறது. அதை குறிப்பதாக ஆடிப்பூரம் திருவிழா நடைபெறும் 10 நாட்களும், அம்மன் தினமும் ஒரு கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி தருவதாக நம்பிக்கை. ஆடிப்பூரம் அன்று தான் சித்தர்களும், யோகிகளும் தங்களுடைய தவத்தைத் தொடங்குகின்றனர் என புராணங்கள் குறிப்பிடுகின்றன.

தேவிக்குரிய திருநாள்களில் ஆடி மாத பூர நட்சத்திரத்தில் கொண்டாடப்படும் 'ஆடிப் பூரம் திருநாள்' மிகவும் சிறப்பானது. கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடத்துவதுபோல, நம்மைப் படைத்த அன்னைக்கு ஆடிப்பூர நாளில் வளைகாப்பு நடத்தி அன்னையின் ஆசி வேண்டுவது வழக்கம். இந்த நாளில் அம்மன் கோவில்களில், அம்பிகைக்கு வளையல்களால் அலங்காரம் செய்து வழிபடுவார்கள். பின்னர் அம்மனை அலங்கரிக்கப் பயன்படுத்திய வளையல்கள், தரிசிக்க வந்த பெண்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

அன்னையின் பிரசாதமாக சில வளையல்களைப் பெற்று அணிந்து கொண்டால், மனம்போல மாங்கல்யம் அமையும், மங்கலங்கள் நிலைக்கும் என்பது ஐதீகம். அதோடு, அம்பிகை தாய்மைக் கோலம் கொண்ட நாள் என்பதால் குழந்தை பாக்கியமும் நிச்சயம் கிட்டும் என்பது ஐதீகமாக உள்ளது.

திருமணமாகாத பெண்கள் ஆடிப்பூர விரதம் கடைப்பிடித்து அம்மனை வழிபட்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்றும், மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அமையும் என்றும் நம்பப்படுகிறது.

ஒவ்வொரு பெண்ணிடமும் அம்பிகையின் அம்சம் நிறைந்துள்ளது. எனவே ஆடிப்பூரம் தினத்தன்று அம்பிகையின் அருள் முழுமையாக நிறைந்திருக்கும் என்பதால், எந்த பேதமும் இன்றி இயன்ற அளவு மற்ற பெண்களுக்கு வளையல்கள், குங்குமம், மஞ்சள், ரவிக்கைத் துணி, புடவை போன்ற மங்கலப் பொருட்களை கொடுக்கலாம். அப்படி செய்தால், இல்லற வாழ்வு சிறப்பாக அமையும். தாலி பாக்கியம் சிறக்க, தாயாகும் பேறுபெற, வளமும் நலமும் பெருக, வேறு எந்த வேண்டுதல்களும் தேவையில்லை. ஆடிப்பூர நாளில் அம்மனுக்கு வளையல் வாங்கிக் கொடுத்தாலே போதுமானது. அனைத்து வளங்களையும் அம்பிகை நிச்சயம் தந்தருள்வாள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

ஆடிப்பூரம் அன்று சக்தி பீடங்கள் என்று அழைக்கப்படும் அம்மன் ஆலயங்களுக்குச் சென்று வழிபாடு செய்தால், கேட்ட வரம் கிடைக்கும். ஆரோக்கியமும், செல்வ செழிப்பும் உண்டாகும். ஆடிப்பூரம் அன்று ஆலயத்திற்குச் சென்று அம்மனை வழிபட இயலாதவர்கள், தங்கள் வீடுகளில் பூஜை அறையில் உள்ள அம்மன் படத்திற்கு முன்பு, பட்டு வஸ்திரம், வளையல், பூக்கள் படைத்து வணங்கலாம். இளம்பெண்கள் மற்றும் திருமணமான பெண்களுக்கு வளையல் கொடுத்து அன்னையின் அருளாசியை பெறலாம். இந்த வழிபாட்டில் அன்னைக்கு பிரியமான பிரசாதமாக பானகம், நீர் மோர், சர்க்கரைப் பொங்கல், கூழ், ஆகியவற்றை படைத்து வேண்டிக்கொண்டால் சகலவிதமான நன்மைகளையும் பெறலாம்.

Tags:    

மேலும் செய்திகள்