ராமேசுவரம் கோவிலில் நாளை நடை அடைப்பு
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் ஆடி திருக்கல்யாண திருவிழா நடைபெற்று வருகிறது.;
ராமேசுவரம்,
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் ஆடி திருக்கல்யாண திருவிழா கடந்த மாதம் 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கடந்த 9-ந் தேதி சுவாமி, அம்பாள் திருக்கல்யாணம் நடைபெற்றது. விழாவின் 15-ம் நாள் நிகழ்ச்சியாக நேற்று மாலை கோவிலில் சுவாமி, அம்பாள் மஞ்சள் நீராடல் உற்சவம் நடைபெற்றது.
இந்த நிலையில், விழாவின் நிறைவாக நாளை (புதன்கிழமை) சுவாமி, அம்பாள் மறு வீட்டிற்கு ராமர் பாதம் மண்டகப்படிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. அதற்காக நாளை காலை 6 மணிக்கு சுவாமி- அம்பாள், பெருமாள் தங்ககேடயத்தில் கோவிலில் இருந்து எழுந்தருளிய பின்னர் கோவில் நடை சாத்தப்படுகிறது.
மீண்டும் மாலை 6 மணிக்கு ராமர் பாதம் மண்டகப்படியில், சிறப்பு தீபாராதனை, பூஜைகள் நடைபெற்று அங்கிருந்து புறப்பாடாகி இரவு 10 மணிக்கு பிறகு கோவிலுக்கு வந்தடைந்த பின்னர், பள்ளியறை பூஜை நடைபெற்று மீண்டும் நடைசாத்தப்படுகிறது. இதனால் நாளை காலை 6 மணி முதல் இரவு வரை கோவிலில் தரிசனம் செய்யவோ, தீர்த்தக்கிணறுகளில் நீராடவோ பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.