நபிகளாரின் அன்பைப்பெற்ற தோழர் ஜுலைபீப் ...

அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதர் நபிகளார் வெளித் தோற்றங்களை பார்ப்பதில்லை. அதே போல ஈமான் கொண்ட நல்லடியார்களும் வெளித் தோற்றங்களை பார்ப்பதில்லை. நபித்தோழர் ஜுலைபீப் வாழ்வியலில் நிகழ்வுகள் நமக்கு கற்றுத் தரும் பாடமாக இருக்கிறது.;

Update:2022-06-28 17:13 IST

வரலாற்றில் அதிகமாக பேசப்படாத ஒரு நபித்தோழர் உண்டு. ஜுலைபீப் என்பது அவரது பெயராகும். அவரது முகம் மற்றும் உடல் தோற்றம் அழகு குறைந்ததாக காணப்பட்டது. இதனால் இவருக்கு எவரும் பெண் தர முன்வரவில்லை.

அவரது உணர்வுகளை புரிந்து கொண்ட நபிகளார் குறிப்பிட்ட ஒரு வீட்டில் பெண் இருக்கிறாள். நீர் போய் அவ்வீட்டில் பெண் கேளும் என்றார்கள். அந்த வீட்டிற்கு சென்று ஜுலைபீப் பெண் கேட்டார். அந்த வீட்டார் பெண் கொடுக்க மறுத்து விட்டார்கள். மனமுடைந்த நிலையில் திரும்பி வந்த ஜுலைபீப் நடந்தவற்றை நபியிடம் சொன்னார்.

பின்பு ஜுலைபீப்பை நபிகளார் வேறொரு வீட்டிற்கு அழைத்துச் சென்றார்கள். அந்த வீட்டிலிருந்தவர் தன் மனைவியிடம் இதுபற்றி ஆலோசித்தார். அப்போது அவரது மனைவி, தன் மகளோ சிறந்த அழகி. அப்படிப்பட்டவரை அழகில் குறைந்தவருக்கு திருமணம் செய்து கொடுப்பது சரியாக இருக்குமா? என்று தயங்கினார்.

இதைக்கேட்டுக் கொண்டிருந்த அந்த வீட்டுப்பெண் தன் பெற்றோரை அழைத்து இவ்வாறு கூறினார்: "அல்லாஹ்வின் தூதரே நம் வீடு தேடி வந்து ஜுலைபீப் பிற்கு பெண் கேட்கிறார்கள். கேட்பது நபிகளார் என்பதால் நான் அதற்கு சம்மதிக்கின்றேன்" என்றார். இதையடுத்து அவர்கள் திருமணம் சிறப்பாக நடந்தது. இவர்களின் வாழ்க்கை மிகச் சிறப்பாகவும் செல்வச் செழிப்புடையதாகவும் அமைந்தது.

காலங்கள் பல உருண்டோட, போருக்கான பிரகடம் செய்யப்பட்டது. அப்போரில் ஜுலைபீபும் கலந்து கொண்டார். போரில் முஸ்லிம்கள் வெற்றி பெற்ற போதிலும் ஜுலைபீப் வீரமரணம் அடைந்தார்.

யுத்த களத்தில் ஜுலைபீப்பின் உடலை நபிகளார் தேடச் சொன்னார்கள். ஜுலைபீப் (ரலி) ஏழு எதிரிகளுக்கு மத்தியில் வீர மரணமடைந்தவராக கண்டெடுக்கப்பட்டார். அவரது உடலைப் பார்த்த நபிகளாரின் கண்களில் கண்ணீர் கசிந்தது.

"இவர் என்னைச் சேர்ந்தவர், நான் அவரைச் சேர்ந்தவன்" என்று நபிகளார் கூறினார்கள்.

அதன்பின் நபிகளாரே தன் கைகளால் ஜுலைபீபின் உடலை தூக்கிச்சென்று அடக்கம் செய்தார்கள். இது ஜுலைபீப்பிற்கு கிடைத்த மகத்தான பெரும் பாக்கியமாகும்.

அழகும் அழகின்மையும் இறைவன் தந்ததே. எனவே, எதற்காகவும் எவரையும் புறம் தள்ளுவதோ, அல்லது ஒதுக்கி வைப்பதோ கூடாது என்பதையே நபிகளாரின் இந்த வாழ்வியலில் நிகழ்வுகள் நமக்கு கற்றுத் தரும் பாடமாக இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்