சபரிமலை அய்யப்பன் கோவிலில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா தொடங்கியது

சபரிமலை அய்யப்பன் கோவிலில் 10 நாட்கள் நடைபெறும் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.;

Update:2024-03-16 13:42 IST

சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில், பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து அபிஷேகம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது, பின்னர் மண்டபத்தில் கொடி வடம் வைத்து வழிபட்ட பின் கோயில் கருவறைக்குள் எடுத்துச் சென்று பூஜை செய்தனர். பின்னர் கொடிமரம் அருகே நடைபெற்ற பூஜைகளுக்கு பின் கொடியேற்றம் நடந்தது. காலை 8.20 மணி முதல் 9 மணி வரை கொடியேற்று வைபவம் நடைபெற்றது.

கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தங்க கொடி மரத்தில் திருக்கொடியை ஏற்றி வைத்து தொடங்கி வைத்தார். அப்போது அங்கு கூடி இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமியே சரணம் அய்யப்பா என சரண கோஷம் எழுப்பினர்.

25-ந் தேதி பம்பையில் அய்யப்பனுக்கு ஆராட்டு நடைபெறும். அன்று மாலையில் கொடி இறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவுபெறும். தொடர்ந்து வழக்கமான பூஜைகளுடன் இரவு நடை அடைக்கப்படும். சபரிமலையில் நடைபெறும் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழாவையொட்டி, தரிசனத்திற்காக ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்தவண்ணம் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்