தை அமாவாசையையொட்டிபல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு;திரளான பக்தர்கள் தரிசனம்

தை அமாவாசையையொட்டி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.

Update: 2023-01-21 21:57 GMT

தை அமாவாசையையொட்டி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.

பண்ணாரி

தை அமாவாசை என்பதால் நேற்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

சத்தியமங்கலத்தை அடுத்து பண்ணாரியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் உள்ளது. தை அமாவாசையைெயாட்டி இந்த கோவிலின் நடை நேற்று காலை 6 மணிக்கு திறக்கப்பட்டது. இதையடுத்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு பண்ணாரி அம்மன் அருள்பாலித்தார். அம்மனை தரிசிப்பதற்காக ஏராளமான பக்தர்கள் பனியையும் பொருட்படுத்தாமல் நேற்று அதிகாலையில் இருந்தே கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர். இதனால் கோவிலில் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. அவர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று அம்மனை தரிசனம் செய்தனர்.

பின்னர் கோவிலை விட்டு வெளியே வந்த பக்தர்கள் குண்டம் அருகே உள்ள சாம்பலை எடுத்து நெற்றியில் விபூதியாக பூசிக்கொண்டனர். மேலும் உப்பு, மிளகு ஆகியவற்றை குண்டம் உள்ள பகுதியில் தூவி அம்மனை வழிபட்டனர். அதுமட்டுமின்றி ஏராளமான பெண் பக்தர்கள் கோவில் முன்பு விளக்கு ஏற்றி தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தினர். கோவில் சார்பில் பக்தர்களுக்கு நேற்று மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. இதையொட்டி சத்தியமங்கலத்தில் இருந்து ஏராளமான சிறப்பு பஸ்கள் பண்ணாரி அம்மன் கோவிலுக்கு இயக்கப்பட்டன.

கோபி

இதேபோல் கோபி அக்ரஹாரம் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள விசாலாட்சி சமேத விஸ்வேஸ்வரர் கோவிலில் தை அமாவாசையையொட்டி சாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. அப்போது சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் சாமி அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமினை தரிசனம் செய்தனர்.

கோபி வடக்கு வீதியில் உள்ள பெரம்பலூர் முத்து மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வெள்ளிக்கவச அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலித்தார். பின்னர் மாலையில் அம்மன் வீதி உலா நடந்தது.

கோபி மாதேசியப்பன் வீதியில் உள்ள மாதேஸ்வரன் கோவில், கோபி அருகே கூகளூரில் உள்ள மீனாட்சி அம்பிகை சமேத நஞ்சுண்டேஸ்வரர் கோவில், பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில், மொடச்சூர் தான்தோன்றியம்மன் கோவில், கொளப்பலூர் பச்சைநாயகி அம்மன் கோவில், அளுக்குளி செல்லாண்டியம்மன் கோவில், கோபி பச்சைமலை சுப்பிரமணிய சாமி கோவில், பவளமலை முத்துக்குமாரசாமி கோவில், கோபி சாரதா மாரியம்மன் கோவில், கோபி மூலவாய்க்கால் ஸ்ரீதேவி பூதேவி கரிவரதராஜ பெருமாள் கோவில், கோபி விசாலாட்சி விஸ்வேஸ்வர சாமி கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல்வேறு கோவில்கள் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி அனைத்து கோவில்களிலும் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

அந்தியூர்

அந்தியூர் பஸ் நிலையம் அருகே உள்ள பத்ரகாளியம்மன் கோவில் நடை தை அமாவாசையைெயாட்டி நேற்று அதிகாலை 4 அளவில் திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையடுத்து அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் காத்து நின்று அம்மனை தரிசனம் செய்தனர்.

இதேபோல் அந்தியூர் செல்லீஸ்வரர் கோவில், கோட்டை பெருமாள் கோவில், அந்தியூர் தேர் வீதியில் உள்ள பேட்டை பெருமாள் கோவில், தவுட்டுப்பாளையம் அழகுராஜா பெருமாள் கோவில், புதுப்பாளையம் குருநாதசாமி கோவில், சந்தியபாளையம் மாரியம்மன் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் தை அமாவாசை சிறப்பு வழிபாடு நடந்தது.

அந்தியூரை அடுத்த வேம்பத்தியில் உள்ள சொக்கநாச்சி அம்மன் கோவிலில் தை அமாவாசை சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து சென்றனர்.

சென்னிமலை

தை அமாவாசையொட்டி சென்னிமலை முருகன் கோவில் நடை நேற்று காலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டு முதலில் கோமாதா பூஜை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து வழக்கமாக நடைபெறும் 6 கால பூஜைகள் மற்றும் தை அமாவாசை சிறப்பு பூஜைகள் தொடர்ந்து நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். பக்தர்களின் வசதிக்காக கோவில் பஸ்கள் கூடுதல் முறை இயக்கப்பட்டது.

இதேபோல் சென்னிமலை கைலாசநாதர், கோவில் மாரியம்மன் கோவில், மேற்கு புதுப்பாளையம் அங்காளம்மன் கோவில் உள்ளிட்ட கிராமப்புற கோவில்களிலும் தை அமாவாசை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்