மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி பெருந்திருவிழா நாளை தொடக்கம்
கேரள பெண் பக்தர்கள் இருமுடி கட்டி இங்கு வந்து அம்மனை வழிபடுவதால் இக்கோவில் பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படுகிறது.;
கன்னியாகுமரி,
குமரி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலும் ஒன்று. கேரள பெண் பக்தர்கள் இருமுடிக்கட்டி இங்கு வந்து அம்மனை வழிபடுவதால் இக்கோவில் பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படுகிறது. இங்கு வருடந்தோறும் மாசி பெருந்திருவிழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடப்பது வழக்கம். இந்த வருடத்தின் மாசி பெருந்திருவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை திருக்கொடியேற்றத்துடன் துவங்கி பல்வேறு நிகழ்ச்சிகளுடன் 10 நாட்கள் நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டு முதல் நாளான நாளை காலை 4.30 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. அதனை தொடர்ந்து 5 மணிக்கு கணபதி ஹோமம், 6.30 க்கு உஷ பூஜை, 7.30 முதல் 8.30 மணிக்குள் திருக்கொடியேற்றம் நடக்கிறது. தொடர்ந்து சமய மாநாடு திடலில் ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் 87-வது சமய மாநாடு கொடியேற்றம் நடக்கிறது. சமய மாநாட்டில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்பட ஆன்மீக சான்றோர்கள் பலர் கலந்து கொள்கின்றனர்.
பின்னர் மதியம் கருமன்கூடல் கே.எஸ்.வி பவனிலிருந்து அம்மனுக்கு சீர் கொண்டு வரும் நிகழ்ச்சி நடக்கிறது. மதியம் உச்ச பூஜை, மாலை தங்கத்தேர் உலா, சாயரட்சை பூஜை, ராஜ ராஜேஸ்வரி பூஜையும், 9 ஆயிரம் திருவிளக்கு பூஜையும், இரவு 9 மணிக்கு அத்தாழ பூஜையும் நடக்கிறது.
2 ம் நாள் முதல் 9 ம் நாள்வரை தினமும் காலை 5 மணிக்கு கணபதி ஹோமம், உஷ பூஜை,காலை 9.30 மற்றும் இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் எழுந்தருளல் மதியம் 1 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 6 மணிக்கு தங்கத்தேர் உலா, 6.30 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 9 மணிக்கு அத்தாழ பூஜையும், 6 ம் நாள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு மாசி பெருந்திருவிழாவின் முக்கிய வழிபாடான வலிய படுக்கை நடக்கிறது.
9 ம் நாள் இரவு 9.30 மணியளவில் மற்றொரு முக்கிய வழிபாடான சிறப்பு நாதஸ்வரம், நையாண்டி மேளத்துடன் பெரிய சக்கர தீவெட்டியுடன் அம்மன் வீதி உலா, 10 ம் நாள் அதிகாலை 2 மணிக்கு மண்டைக்காடு சாஸ்தான் கோயிலிருந்து புனித நீர் கொண்டு வருதல், 3.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் எழுந்தருளல், 4.30 மணிக்கு அடியந்திர பூஜை, 6 மணிக்கு குத்தியோட்டம், மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 8.மணிக்கு ஹரிகதை மற்றும் இன்னிசை விருந்து, 9 மணிக்கு அத்ததாழ பூஜை, நள்ளிரவு 12 மணியளவில் சாஸ்தான் கோயிலிருந்து ஒடுக்கு பூஜை பதார்த்தங்கள் திருக்கோவிலுக்கு கொண்டு வருதல்,1 மணிக்குள் ஒடுக்கு பூஜை நடக்கிறது.
சமய மாநாடு திடலில் ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் தினமும் ஆன்மீக சொற்றோடர், பக்தி பஜனை மற்றும் ஸ்ரீமத் பாகவத மாஹாத்மிய பாராயணமும், விளக்கவுரையும், மகாபாரதம் தொடர் விளக்கவுரையும் நடக்கிறது. 8 ம் நாள் காலை 8 மணி முதல் பிற்பகல் 3.30 வரை மாணவர்களுக்கான சொற்பொழிவு போட்டி, 9 ம் நாள் இரவு 7 மணி முதல் 10 மணி வரை சமய மாநாடு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்,10 ம் நாள் பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை பரிசளிப்பு விழா ஆகியவை நடக்கின்றன.
கோவிலில் மாசி பெருந்திருவிழா பந்தல்கால் நட்டது முதல் கேரள பக்தர்கள் மண்டைக்காடு வந்து பொங்கலிட்டு அம்மனை வழிபட்டு வருகின்றனர். நேற்று வேன்,பஸ்களில் பக்தர்கள் பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர். கேரள பக்தர்களின் வருகையால் கோவில் சன்னதி, பொங்கலிடும் பகுதி,கடற்கரை ஆகிய பகுதிகளில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.