சபரிமலையில் இன்று மகரவிளக்கு பூஜை
திருவாபரணங்கள் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு இன்று சிறப்பு தீபாராதனை நடைபெறும்.
திருவனந்தபுரம்,
பிரசித்திப்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கை முன்னிட்டு கடந்த மாதம் (டிசம்பர்) 30-ந் தேதி நடை திறக்கப்பட்டது. தினசரி சாமி அய்யப்பனுக்கு நெய் அபிஷேகம், புஷ்பாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் இன்று நடைபெறுகிறது.
மகரவிளக்கு பூஜையையொட்டி, சுவாமி ஐயப்பனுக்கு அணிவிக்க ஊா்வலமாக எடுத்துச் செல்லப்படும் திருவாபரணம், பெரு வழி பாதையான எருமேலி, களைகட்டி, அழுதாமலை, முக்குழி, கரிமலை வழியாக நடைபயணமாக இன்று மதியம் பம்பை சென்றடையும். அங்கிருந்து பக்தர்களின் சரண கோஷம் முழங்க ஆபரண பெட்டிகள் நீலிமலை, சரம்குத்தி, மரக்கூட்டம் வழியாக மாலை 6.30 மணிக்கு சபரிமலைக்கு கொண்டு செல்லப்படும்.
அங்கு திருவாபரண பெட்டிகளுக்கு திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் 18-ம் படிக்கு கீழ் பகுதியில் மந்திரி ராதாகிருஷ்ணன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்படும். தொடர்ந்து 18-ம் படி வழியாக சன்னிதானம் கொண்டு செல்லப்படும் திருவாபரணங்கள் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெறும்.
தீபாராதனைக்கு பிறகு பொன்னம்பல மேட்டில் சாமி ஐயப்பன் 3 முறை பக்தர்களுக்கு ஜோதி வடிவில் காட்சி அளிப்பார். அப்போது பக்தர்கள் ஜோதியை 'சாமியே சரணம் ஐயப்பா' என சரண கோஷம் முழங்கி தரிசனம் செய்வார்கள்.