கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா தொடக்கம்: 23-ந் தேதி திருநங்கைகளுக்கு தாலி கட்டும் நிகழ்ச்சி

கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா நேற்று தொடங்கியது. வருகிற 23-ந்தேதி திருநங்கைகளுக்கு தாலி கட்டும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

Update: 2024-04-10 10:36 GMT

கள்ளக்குறிச்சி,

3-ம் பாலினமாக கருதப்படும் திருநங்கைகளின் குலதெய்வமாக வணங்கும் கூத்தாண்டவர் கோவில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கிராமத்தில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா 18 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, மராட்டியம், கர்நாடகா, ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான திருநங்கைகள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டுக்கான திருவிழா நேற்று மாலை சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

2-ம் நாளான இன்று(புதன்கிழமை) கோவில் அருகே உள்ள பந்தலடியில் ஊர் முக்கியஸ்தர்களுக்கு தாலி கட்டு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மேலும் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 23-ந்தேதி சாமி கண் திறத்தல் மற்றும் திருநங்கைகளுக்கு தாலி கட்டும் நிகழ்ச்சியும், 24-ந்தேதி காலையில் தேரோட்டமும், அதன்பின்னர் திருநங்கைகளுக்கு தாலி அறுக்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

இதுதவிர தினசரி சாமி வீதிஉலாவும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்