இஸ்லாம்: சமூக நல்லிணக்கம் காப்போம்
‘இஸ்லாம்’, ‘முஸ்லிம்’ என்ற அரபுச்சொல்லிற்கு கூட முறையே ‘நிம்மதியைத் தருதல்’ என்றும், ‘நிம்மதியைத் தருபவர்’ என்றும் தான் பொருள்.
எந்த மனிதனும் தன்னந்தனியாக வாழ்ந்துவிட முடியாது. ஒருவரோடு ஒருவர் சேர்ந்து, இணைந்து, இசைந்து தான் வாழ வேண்டும். அப்படி வாழுகிறபோது மதம், இனம், மொழி, நிறம், கலை, கலாசாரம், சமயம், பண்பாடு போன்றவற்றை அவன் எதிர்கொள்ள வேண்டியதிருக்கிறது.
இஸ்லாமின் முழு மூல வேதமான திருக்குர்ஆனிலும் சகோதர சமயங்களுடன் நல்லிணக்கம் பேணிய செய்திகள் பல உண்டு.
"மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்துகொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஆன்மாவில் இருந்து தான் உற்பத்தி செய்தான். பின்பு அவ்விருவரிலிருந்தும் ஆண்கள், பெண்கள் என பலரையும் இப்பூமியில் பரப்பினான். ஆகவே, அத்தகைய அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து நடந்து கொள்ளுங்கள். அவனைக் கொண்டே நீங்கள் உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக் கேட்டுக்கொள்கின்றீர்கள். இன்னும் ரத்தக் கலப்பான தொப்புள் கொடி உறவினர்களிடமும் அன்பாக நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கின்றான்". (திருக்குர்ஆன் 4:1)
"மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்துகொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களை கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; ஆகவே,உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்கள் தான் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், யாவற்றையும் சூழ்ந்து தெரிந்தவன்". (திருக்குர்ஆன் 49:13)
இந்த இரண்டு வசனங்களும் மனிதன் எங்கிருந்து வந்தவன், அவன் எப்படிப்பட்டவன், அவன் எப்படி நடந்து கொள்ள வேண்டும், அவனைச் சுற்றியிருப்பவர்களும் அவனைப்போன்ற மனிதர்கள் தான் என்பதை வெகுஅழகாக எடுத்துக்கூறுகிறது. இறுதியாக நீங்கள் யாராக இருந்தாலும் நீங்களும் மனிதர் தான் என்பதை மட்டும் மறந்து விடாதீர் என்பதை சற்று அழுத்தமாகவே உணர்த்திக் காட்டுகிறது.
தீய சக்திகளுக்கும், தீய சிந்தனைகளுக்கும் எப்போதுமே நாம் உடன்பட்டு விடக் கூடாது. நபிகள் நாயகமும் அவரது அருமைத் தோழர்களும் அவ்வாறு தான் வாழ்ந்து காட்டிச் சென்றிருக்கிறார்கள்.
"அண்டை வீட்டான் பசித்திருக்க தான் மட்டும் புசிப்பவனாக இருப்பவன் உண்மையான இறைவிசுவாசியல்ல...!" என்று நபிகள் நாயகம் சொன்னது அனைத்து வகையான அண்டை வீட்டார்களுக்கும் பொருந்தும். இறைவன் புறத்தோற்றங்களையும், புறஉருவங்களையும் பார்ப்பதில்லை. மனிதன் தான் அநேக நேரங்களில் புறத்தோற்றங்களையும் புற உருவங்களையும் பார்க்கத் தொடங்கி விடுகின்றான்.
"எவர் ஒரு ஆத்மாவை வாழவைக்கிறாரோ, அவர் அனைத்து ஆத்மாக்களையும் வாழ வைத்தவரைப் போன்றவர் ஆவார்" (திருக்குர்ஆன் 5:32) என்ற இறைவசனம் பொதுமைத் தன்மையுடன் தான் நம்மிடம் உரையாடுகிறது, இங்கு ஜாதி, மத பேதங்கள் அறவே கூறப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
இன்னும் ஒருபடி மேலே போய் "உங்களிடமிருந்து மற்றவர்கள் பெறும் நிம்மதியில் தான் உங்களது முழு நிம்மதியும் நிறைந்திருக்கிறது" என்கிறார்கள் நபிகள் நாயகம்.
'இஸ்லாம்', 'முஸ்லிம்' என்ற அரபுச்சொல்லிற்கு கூட முறையே 'நிம்மதியைத் தருதல்' என்றும், 'நிம்மதியைத் தருபவர்' என்றும் தான் பொருள். எனவே நாம் நமது மார்க்கத்தின் நற்பெயருக்கு ஏற்ப நன்மக்களாக நடந்து கொள்வதில் தான் நமக்கான எதிர்காலம் பிரகாசித்துக்கொண்டிருக்கிறது என்பதையும் மனதில் நன்கு நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும்.
வாருங்கள்... சமூக நல்லிணக்கத்தை உலகெங்கும் விதைத்திடுவோம்...!