கருட பஞ்சமி விரதம் இருப்பது எப்படி?

கருட பஞ்சமி அன்று நோன்பிருந்து கவுரி அம்மனை நாக வடிவில் ஆராதிக்க வேண்டும்.;

Update:2024-08-09 11:26 IST

ஆடி அமாவாசைக்குப் பிறகு வளர்பிறை பஞ்சமி திதி அன்று கடைபிடிக்கப்படும் முக்கியமான விரதம் கருடபஞ்சமி விரதமாகும். திருமணமான பெண்கள் கருடனை நினைத்து விரதம் இருந்தால் நாக தோஷம் நீங்குவதோடு, கருடனைப் போல புத்திமானாகவும், வீரனாகவும் பிள்ளைகள் பிறப்பார்கள் என்பது நம்பிக்கை.

கருட பஞ்சமியில் பெண்கள் விரதம் இருந்து ஆதிசேஷன் விக்கிரகம் வைத்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபடுவார்கள். வீட்டின் பூஜை அறையில் அம்பிகைக்கு முன்பு கருடரையும் நாகராஜரையும் எண்ணி வழிபடலாம். வீட்டுக்கு அருகே உள்ள புற்றுக் கோயிலுக்குச் சென்று, புற்றுக்கு பால் ஊற்றி வழிபடலாம். அன்றைய தினம் நோன்பிருந்து கவுரி அம்மனை நாக வடிவில் ஆராதிக்க வேண்டும். அன்று வடை, பாயசம், முக்கியமாக எண்ணெய் கொழுக்கட்டையோ அல்லது பால் கொழுக்கட்டையோ செய்து, நாகருக்கு பூஜை செய்து, தேங்காய் உடைத்து வைத்து, பழம், வெற்றிலை, பாக்குடன் நைவேத்யம் செய்வது மிகுந்த பலனை தரும்.

விரத முறை

அதிகாலையில் எழுந்து நீராடி, வீட்டை சுத்தம் செய்து, வாசலில் மாவிலை தோரணம் கட்டி அலங்கரிக்கவேண்டும். வீட்டின் நுழை வாசல் கதவின் அருகே உள்ள சுவரில் மஞ்சள், குங்குமம் தடவி வைக்க வேண்டும். இது மங்கல வரவேற்பு என்பதால் வீட்டில் நேர்மறை எண்ணங்கள் நிறையும்.

பூஜை அறையிலோ அல்லது வேறு ஒரு தூய்மையான இடத்திலோ, பூக்களால் அலங்கரித்து ஐந்து நிறங்களைக் கொண்ட கோலங்கள் போட வேண்டும். நடுவில் ஒரு பலகை போட்டு, அதன் மேல் தலை வாழை இலையை விரித்து பச்சரிசியை கொட்டி வைத்து அதன் மேல் நாக உருவத்தை வைக்கவேண்டும்.

மஞ்சளால் செய்யப்பட்ட கவுரிதேவியின் வடிவத்தை வைத்து அலங்காரங்கள் செய்து பூஜை செய்ய வேண்டும். பருத்தி நூலால் ஆன மஞ்சள் சரடை சார்த்தவும். அன்னை கவுரி தேவி, நாகத்தின் உருக்கொண்டு வருவதாக ஐதீகம். எனவே, இந்த நாளில் கவுரி அம்மனை பூஜிக்கவேண்டும்.

இப்படி பூஜை செய்பவர்களின் கோரிக்கைகள் எல்லாம் முழுமையாக நிறைவேறும். இந்த விரதத்தை முறைப்படி அனுஷ்டித்து பூஜை செய்வர்கள் சகல விதமான செல்வங்களையும் பெறுவார்கள், அவர்களுக்கு நாக தோஷம் இருந்தால் நீங்கும் என்பது ஐதீகம்.

Tags:    

மேலும் செய்திகள்