ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா:தீர்த்தக்குடம்- அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் ஊர்வலம்

ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி தீர்த்தக்குடம், அக்னி சட்டி எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர்.

Update: 2023-03-26 21:51 GMT

ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி தீர்த்தக்குடம், அக்னி சட்டி எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர்.

திருவிழா

ஈரோடு மாநகர் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலிலும், சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் ஆகிய வகையறா கோவில்களிலும் குண்டம் தேர்த்திருவிழா கடந்த 21-ந் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் இரவில் பட்டாளம்மன் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கம்பம் நடும் விழா நடந்தது. இதையொட்டி காரை வாய்க்கால் மாரியம்மன் கோவிலில் தயாராக உள்ள 3 கம்பங்களுக்கும் மஞ்சள் பூசப்பட்டு, மலர்கள், வேப்பிலை கட்டப்பட்டது. அங்கிருந்து 3 கம்பங்களும் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டன. இதையடுத்து பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் ஆகிய கோவில்களில் கம்பங்கள் நடப்பட்டன.

இந்த கம்பங்களுக்கு பக்தர்கள் புனிதநீர் ஊற்றி வழிபட்டார்கள். நேற்று அதிகாலையில் இருந்தே கம்பத்துக்கு புனிதநீர் ஊற்றுவதற்காக பக்தர்கள் கோவில்களில் குவிந்தார்கள்.

அக்னி சட்டி ஊர்வலம்

ஈரோடு காவிரிக்கரையில் இருந்தும், தங்களது பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பெரிய மாரியம்மன் கோவிலை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். அப்போது பக்தர்கள் தீர்த்தக்குடம், பால் குடம், அக்னி சட்டியை கைகளில் ஏந்தியபடி ஊர்வலமாக சென்றார்கள். இதேபோல் பக்தர்கள் பலர் அலகு குத்தி வந்தும் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.

மாநகர் பகுதியில் பல்வேறு இடங்களில் இருந்து கோவிலை நோக்கி பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர். அவர்கள் மேள தாளம் முழங்க கோவிலுக்கு வந்ததால் அந்த பகுதியே விழாக்கோலம் பூண்டு காணப்பட்டது. கோவிலில் அம்மனை தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தார்கள். இதற்காக அமைக்கப்பட்ட தடுப்புகளில் பக்தர்கள் வரிசையாக சென்று கம்பத்துக்கு புனிதநீர் ஊற்றினர். பிறகு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த பெரிய மாரியம்மனை பக்தர்கள் வழிபட்டனர். இதேபோல் சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. அந்த கோவில்களிலும் நடப்பட்ட கம்பங்களுக்கு பெண் பக்தர்கள் புனிதநீர், பால் ஊற்றினார்கள். விழாவையொட்டி சின்ன மாரியம்மனும், காரை வாய்க்கால் மாரியம்மனும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

மாவிளக்கு பூஜை

விழாவையொட்டி ஈரோடு சவுராஷ்ட்ரா சபை சார்பில் மாவிளக்கு பூஜை நடைபெற்றது. இதையொட்டி பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் ஆகிய 3 கோவில்களிலும் அம்மனுக்கு சாற்றப்படுவதற்காக சேலைகள் வழங்கப்பட்டன. இதில் வீடுகளில் இருந்து வேண்டுதல் வைத்து மாவிளக்குகளை பெண்கள் எடுத்து வந்து அம்மனை வழிபட்டார்கள். திருவிழாவையொட்டி ஈரோட்டில் பல்வேறு இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கோவில்கள், மாநகராட்சி அலுவலக வளாகம், பெரியார் மன்றம் உள்ளிட்ட இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும், கம்பங்கூழ், நீர்மோர் ஆகியன வழங்கப்பட்டது.

குண்டம் விழா

வருகிற 4-ந் தேதி அதிகாலை 5.30 மணிக்கு காரை வாய்க்கால் மாரியம்மன் கோவிலில் குண்டம் விழாவும், 5-ந் தேதி காலை 9.30 மணிக்கு பொங்கல் விழாவும், அன்றைய தினம் சின்ன மாரியம்மன் கோவிலில் தேரோட்டமும் நடக்கிறது. 8-ந் தேதி மதியம் 3 மணிக்கு கம்பம் பிடுங்கும் விழாவும், மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்