ஆன்மிக வாழ்வை தொடங்கி வைக்கும் தீட்சை
ஸ்பரிச தீட்சை, நயன தீட்சை, மானச தீட்சை, வாசக தீட்சை, மந்திர தீட்சை, யோக தீட்சை, ஞான தீட்சை, வித்யா தீட்சை, தந்திர தீட்சை, பிரம்ம தீட்சை உள்ளிட்ட 81 வகையான தீட்சைகள் உள்ளன.;
ஆன்மீக வாழ்க்கையில் ஈடுபட விரும்பும் ஒருவர் தன்னுடைய குருவிடம் இருந்து தீட்சை பெறுவது வழக்கம். தீட்சை என்பதற்கு ஆரம்பம் என்று அர்த்தம். அதாவது ஒரு மந்திரத்தின் மூலமாக தன்னுடைய ஆன்மீக வழியில் முன்னேற்றம் அடைவதற்காக குருவின் மூலம் பெற்ற உபதேசத்தை தொடங்கி செய்வது என்பது அதன் பொருளாகும்.
தீட்சை என்ற ஒரு ஆன்மீக நடைமுறைக்கு மூன்று அடிப்படை விஷயங்கள் தேவை. முதலாவது, தீட்சை தருவதற்கான ஆன்மீக குரு. இரண்டாவது தீட்சை பெறுவதற்கான மாணவன். மூன்றாவது தீட்சைக்கு உரிய மந்திரம் அல்லது நெறிமுறை. இந்த மூன்று விஷயங்களும் மிகச்சரியாக அமைந்தால் தான் ஒருவரது ஆன்மீக வளர்ச்சி என்பது சாத்தியம்.
ஆன்மீக சான்றோர்கள் அவரவர்களுக்கு உரிய வழிகளில் பல்வேறு தீட்சைகளை வழங்குகிறார்கள். அவை, ஸ்பரிச தீட்சை, நயன தீட்சை, மானச தீட்சை, வாசக தீட்சை, மந்திர தீட்சை, யோக தீட்சை, ஞான தீட்சை, வித்யா தீட்சை, தந்திர தீட்சை, பிரம்ம தீட்சை உள்ளிட்ட 81 வகையான தீட்சைகள் உள்ளன. சாஸ்திர ரீதியாக 64 முறைகள் வழக்கத்தில் கடைபிடிக்கப்படுகின்றன.
நயன தீட்சை என்பது குரு சீடனை தன்னுடைய கண் பார்வை மூலம் அவனது உள்ளத்தில் உள்ள மாயையை விலக்குவதாகும்.
ஸ்பரிச தீட்சை என்பது சீடனுடைய தலையில் கை வைத்து சக்தி பரிமாற்றம் செய்வதாகும்.
வாசக தீட்சை என்பது சீடனுடைய மனோ நிலைக்கு ஏற்ப குறிப்பிட்ட உபதேசத்தை அவனுடைய வலது காதில் ஓதுவதாகும்.
மானச தீட்சை என்பது ஒரு குருவினுடைய ஆன்மீக சக்தி மூலம் சீடனுடைய இதயத்தில் ஆன்மீக உணர்வுகளை தட்டி எழுப்புவதாகும்.
ஞான தீட்சை என்பதும் ஓம் என்ற பிரணவத்தின் உட்பொருளை மௌனத்தின் மூலம் உணர்த்துவதாகும்.
வித்யா தீட்சை என்பது குரு தன்னிடம் உள்ள ஒரு சாஸ்திர வித்தையை சீடனுக்கு முறைப்படி உபதேசித்து கற்றுத் தருவதாகும்.
தந்திர தீட்சை என்பது குறிப்பிட்ட ஆன்மீக சக்தியை பெறுவதற்காக வழிபாடு அல்லது பூஜை முறைகளை நியமத்துடன் கடைபிடிக்க உத்தரவு அளிப்பதாகும்.
நம்முடைய ஆன்மீக சாஸ்திரங்கள் தெரிவிப்பது என்னவென்றால் எந்த ஒரு கலையாக இருந்தாலும் அதற்கு ஒரு குரு அவசியம் என்பதுதான். அதனால்தான் குரு இல்லா வித்தை பாழ் என்ற ஒரு பழமொழி ஏற்பட்டது.
கட்டுரையாளர்: சிவகிரி ஜானகிராம்