விஜயதசமியை முன்னிட்டு திருத்தணி முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

விஜயதசமியை முன்னிட்டு திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

Update: 2022-10-05 10:33 GMT

திருத்தணி:

முருகனின் ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படைவீடாக திகழ்வது திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இந்த கோயிலுக்கு வந்து செல்வது வழக்கம். இக்கோவிலுக்கு விடுமுறைநாட்களில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படும்.

இந்நிலையில் செவ்வாய், புதன் ஆகிய 2 நாட்களுக்கு அரசு விடுமுறை தினம் மற்றும் இன்று விஜயதசமி நாள் என்பதால் ஆந்திர, கர்நாடக மாநிலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர். இதனால் கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டமாக காணப்பட்டது. இதன் காரணமாக எப்போதும் இல்லாத அளவில் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

இதனால், பொதுவழியில், பக்தர்கள் நீண்ட வரிசையில் 2 மணி நேரம் காத்திருந்து முருக பெருமானை தரிசித்தனர். அதே போல் ரூ.100 தரிசன கட்டண டிக்கெட் பெற்ற பக்தர்கள் 1 மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.

மாற்றுத்திறனாளிகள் அவதி:

முருகன் கோவிலுக்கு சாமி தரிசனத்திற்கு வரும் மாற்றுத்திறனாளிகள் இதற்கு முன்பு கட்டண விரைவு தரிசன வழியில் அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு இந்து அறநிலைத்துறை ஆணையரின் உத்தரவின்படி முருகன் கோவிலில் விரைவு தரிசன கட்டண வழிகள் ரத்து செய்யப்பட்டது.

இதனால் கோவிலுக்கு வரும் மாற்றுத்திறனாளிகள் தரிசனத்திற்காக பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே கோவில் நிர்வாகம் மாற்றுத்திறனாளிகள் செல்வதற்கான சிறப்பு ஏற்பாடுகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை வைத்துள்ளனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் பொது வழி மற்றும் 100 ரூபாய் சிறப்பு தரிசன கட்டணத்தில் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்