பக்தி பாடலை பாடிய ஜெர்மனி பாடகி - ஜக்கி வாசுதேவ் பாராட்டு
முதன் முறையாக இந்தியா வந்துள்ள ஜெர்மனி பாடகி கசாண்ட்ரா பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆவார்.;
கோவை,
சமூக வலைதளத்தில் மிகவும் புகழ் பெற்றிருப்பவர் பாடகி கசாண்ட்ரா. ஜெர்மனி நாட்டை சேர்ந்த இவர் பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆவார். இவர் கன்னட பாடல்களை பாடி காணொளி வெளியிட்டதன் மூலம் மிகவும் பிரபலமடைந்தார்.
இந்நிலையில், முதல்முறையாக இந்தியா வந்துள்ள பாடகி கசாண்ட்ரா கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு சென்றார். அங்கு அவர் சத்குரு ஜக்கி வாசுதேவை நேரில் சந்தித்து பேசினார்.
அப்போது ஆதி சங்கரர் இயற்றிய சமஸ்கிருத பாடல் "நிர்வாண ஷடகத்தை " சத்குரு ஜக்கி வாசுதேவிற்கு கசாண்ட்ரா பாடி காட்டினார். அவருக்கு சத்குரு ஜக்கி வாசுதேவ் மலர் மாலை அணிவித்து ஆசி வழங்கினார்.
இந்த காணொளியை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த ஜக்கி வாசுதேவ் "நமஸ்காரம் கசாண்ட்ரா! ஈஷா யோகா மையத்தில் நீங்கள் எங்களுடன் இருந்தது அற்புதமானது மற்றும் பக்தி என்ற தடைகள் ஏதும் அறியாத மொழியில் நீங்கள் பாடுவதை கேட்பது சிறந்த விருந்தாக இருந்தது. குறையைக் கூட நிறைவானதாக மாற்ற முடியும் என்பதற்கு நீங்கள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. உங்களுக்கு என் வாழ்த்துகளும் ஆசியும்"என பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதற்கு, "நான் கேட்டதிலேயே மிகவும் ஊக்கமளிக்கும் வார்த்தைகள் இவை . உங்களோடு இருந்த தருணங்களை எண்ணி மகிழ்கிறேன்" என காசண்ட்ரா பதில் பதிவு செய்துள்ளார். ஈஷா யோகா மையத்தில் அவர் தங்கியிருந்தபோது, சில யோகாப் பயிற்சிகளை கற்றுக் கொண்டுள்ளார்.
முன்னதாக, திருச்சிக்கு பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்துக்கு வந்தபோது அவர் முன்பு பக்தி பாடலை பாடி கசாண்ட்ரா பாராட்டு பெற்றதும் குறிப்பிடத்தக்கது.