சாஸ்தாவின் எட்டு அவதாரங்கள்

தர்ம சாஸ்தா வேறு, அய்யப்பன் வேறு அல்ல என்றாலும், தர்ம சாஸ்தாவின் திரு அவதாரமே அய்யப்பன் .;

Update:2024-01-10 10:50 IST

மகாவிஷ்ணுவின் மோகினி அவதாரத்தை சாதகமாக்கி, விதி வசத்தால் நிகழ இருக்கும் மகிஷி சம்ஹாரத்தை நிகழ்த்த சிவபெருமானும், மகாவிஷ்ணுவும் முடிவு செய்தனர். அதன் அடிப்படையில், பரமேஸ்வரனின் சக்தியும், மோகினியாக உருவெடுத்திருந்த மகாவிஷ்ணுவின் சக்தியும் இணைந்ததால், பிறந்தவர் ஹரிஹரபுத்திரன் என்று அழைக்கப்படும் தர்ம சாஸ்தா என விஷ்ணு புராணம் கூறுகிறது.

பஸ்மாசுரன் என்னும் அசுரனை மகா விஷ்ணு மோகினி வடிவில் வந்து வதம் செய்தார். அப்போது மோகினி மீது, பரமேஸ்வரன் மோகம் கொள்ள ஹரிஹர புத்திரனான அய்யப்பன் அவதரித்தார் என்று பத்ம புராணம் சொல்கிறது.

விஷ்ணு புராணம், பத்ம புராணம் இரண்டும் வேறு வேறு கதைகளைச் சொன்னாலும், அவை இரண்டும் ஈசன், விஷ்ணு சக்தியால் பிறந்தவர் தர்ம சாஸ்தா என்பதை உறுதிப்படுத்துகிறது. தர்ம சாஸ்தாவை தந்தையாகிய சங்கரனும், தாயாகிய நாராயணமூர்த்தியும் பூலோகத்தைக் காவல் புரியும் காவல் தெய்வமாக (ஐயனாராக) ஆசீர்வதித்து, பிரம்மாவிடம் ஒப்படைத்தார்கள். குறுகிய காலத்திலேயே சகல சாஸ்திரங்களையும் பிரம்மாவிடம் கற்று 'மஹா சாஸ்த்ரு' என்ற நாமத்தையும் பெற்றார். தர்ம சாஸ்தா வேறு, அய்யப்பன் வேறு அல்ல என்றாலும், தர்ம சாஸ்தாவின் திரு அவதாரமே அய்யப்பன். தர்மசாஸ்தா தர்மத்தை நிலை நாட்டுவதற்காகத் தோன்றியவர். சாஸ்தாவின் வரலாறு மிகப் புனிதமானது. அவர் எட்டு அவதாரங்கள் எடுத்ததாக சொல்லப்படுகிறது.

சம்மோஹன சாஸ்தா: வீட்டையும், குடும்பத்தையும் காக்கும் தெய்வம் இவர்.

கல்யாண வரத சாஸ்தா: தேவியருடன் காட்சி தரும் இவரை வழிபட்டால், திருமணத்தடைகள், தோஷங்கள் விலகும்.

வேத சாஸ்தா: சிம்மத்தில் அமர்ந்திருக்கும் இவரை வழிபட்டால் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கலாம்.

ஞான சாஸ்தா: தட்சிணா மூர்த்தியைப் போன்ற ஞானகுருவான இவரை வழிபட்டால் உள்ளார்ந்த ஞானம் சிறக்கும்.

பிரம்ம சாஸ்தா: குழந்தைச் செல்வம் பெற இவரை வழிபடலாம்

மஹா சாஸ்தா: வாழ்வில் முன்னேற இவரை வழிபடலாம்.

வீர சாஸ்தா: ருத்ர மூர்த்தியான இவரை வணங்குவதால் தீமைகள் அழியும்.

தர்ம சாஸ்தா:  சபரிமலையில் அய்யப்பனாக காட்சி தருபவர் இவரே. இவரின் அவதார நோக்கமே மஹிஷி மர்த்தனம் ஆகும். மேலும் அவர் தன்னுடைய பக்தர்களுக்காக, ஆண்டுதோறும் சபரிமலையில் உள்ள பொன்னம்பல மேட்டில் ஜோதி வடிவமாக காட்சி தருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்