நீராடும் சிவலிங்கம்
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சித்தோர்கர் கோட்டையில் இருக்கிறது, ‘கவ்முக் குந்த் (கோமுகம்) நீர்த்தேக்கம்’. ‘கவ்முக்’ என்பது ‘பசுவின் வாய்’ என்று பொருள்படும்.
பசுவின் வாய் வடிவப் புள்ளியில் இருந்து பள்ளமாக அமைந்த பகுதிக்கு நீர் பாய்ந்து, அதனை நீர்த்தேக்கமாக மாற்றுகிறது. இதனை 'கோமுகம்' என்று அழைக்கிறார்கள்.
புனித தலங்களுக்கு யாத்திரையாகச் செல்லும் பக்தர்கள் பலரும், தங்களின் யாத்திரையின் நிறைவாக, இந்த நீர்த்தேக்கத்திற்கு வந்து அங்குள்ள சிவலிங்கத்தை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். இதனால் இந்த இடம், சித்தோர்கரின் 'தீர்த் ராஜ்' என்று புகழப்படுகிறது.
இந்த நீர்த்தேக்கத்தில் விழும் நீரானது, வருடம் முழுவதும் பாய்கிறது. கோடை காலத்தில் நீரின் வேகம் குறைவாக இருக்கும். இதனால் சிவலிங்கம் வெளியே தெரியும். ஆனால் மழை மற்றும் குளிர்காலங்களில் அதிகமாக நீர்வரத்து இருப்பதால், சிவலிங்கம் நீருக்குள் மூழ்கியிருப்பதைக் காண முடியும். இந்த நீர்த்தேக்கத்திற்கு வரும் தண்ணீர் எங்கிருந்து வருகிறது என்பது இதுவரை கண்டறியப்படவில்லை என்கிறார்கள்.