கோவில்களில் ஓதுவார், அர்ச்சகர் ஆக வேண்டுமா..? ஊக்கத் தொகையுடன் பயிற்சி பெற அரிய வாய்ப்பு
ஓதுவார் படிப்புக்கான பயிற்சி காலம் 3 ஆண்டுகள், அர்ச்சகர் படிப்புக்கான பயிற்சி காலம் ஓராண்டு ஆகும்.;
மதுரை:
மதுரை மீனாட்சியம்மன் திருக்கோவிலால் நடத்தப்படும் ஓதுவார் பயிற்சிப் பள்ளி மற்றும் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி ஆகியவற்றில், உறைவிடக் கல்வி மாணவர் சேர்க்கைக்கு இந்து மதத்தைச் சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஒதுவார் பயிற்சிப் பள்ளி மற்றும் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து படிப்பதற்கு பள்ளிக் கல்வியில் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். ஓதுவார் படிப்புக்கு வயது 13 முதல் 20-க்குள் இருக்க வேண்டும், அர்ச்சகர் படிப்புக்கு 14 வயது முதல் 24 வயது வரை இருக்க வேண்டும்.
ஓதுவார் படிப்புக்கான பயிற்சி காலம் 3 ஆண்டுகள், அர்ச்சகர் படிப்புக்கான பயிற்சி காலம் ஓராண்டு ஆகும். பயிற்சி காலத்தில் ஒவ்வொரு மாணவருக்கும் மாதம் ஒன்றுக்கு 4000 ரூபாய் வீதம் ஊக்கத் தொகை வழங்கப்படும். உணவு, உடை, தங்குமிடம், மருத்துவ வசதி ஆகியவை திருக்கோவிலால் கட்டணமில்லாமல் வழங்கப்படும்.
மாணவர் சேர்க்கை படிவங்களை திருக்கோவில் அலுவலகத்தில் அலுவலக நேரத்தில் பெற்றுக்கொள்ளலாம். திருக்கோவிலின் இணையதளத்தில் https://maduraimeenakshi.hrce.tn.gov.in/ இருந்தும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பங்களை 19-7-2024 மாலை 5.45 மணிக்குள் அனுப்பவேண்டும் என திருக்கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.