திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆத்யாயன உற்சவம் நாளை தொடங்குகிறது..!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆத்யாயன உற்சவம் 25 நாட்கள் நடக்கிறது.
திருமலை,
திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ள ரெங்கநாயக்கர் மண்டபத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் ஜனவரி 5-ந்தேதி வரை 25 நாட்கள் ஆத்யாயன உற்சவம் நடக்கிறது. அந்த நேரத்தில் நாலாயிர திவ்யப் பிரபந்த பாசுரங்கள் பாராயணம் செய்யப்படும்.
பொதுவாக ஏழுமலையான் கோவிலில் தனுர் மாதத்தில் வைகுண்ட ஏகாதசிக்கு 11 நாட்களுக்கு முன்னால் ஆத்யாயன உற்சவம் தொடங்கும். அதில் முதல் 11 நாட்கள் 'பகல் பத்து' என்றும் மீதமுள்ள 10 நாட்கள் 'இரவு பத்து' என்றும் அழைக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து 22-ந்தேதி கண்ணிநுண் சிறுதாம்பு, 23-ந்தேதி ராமானுஜ நூற்றந்தாதி, 24-ந்தேதி வராகசாமி சாத்துமுறை, 25-ந்தேதி ஆத்யாயன உற்சவம் நிறைவடைகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.