அபுதாபியில் பிரமாண்ட இந்து கோவில் 14-ம் தேதி திறப்பு
அமீரகத்தின் சகிப்புத்தன்மை மற்றும் மதநல்லிணக்கத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இந்த கோவில் விளங்குகிறது.;
ஐக்கிய அரபு அமீரகம் ஒரு இஸ்லாமிய நாடாகும். ஆனால் அனைத்து மொழி, இனம், மதங்களை சேர்ந்த மக்களை அமீரகம் அரவணைத்துக் கொள்வது அதன் மதத்திற்கு அப்பாற்பட்ட மனிதநேயத்தை காட்டுகிறது.
இங்கு சுமார் 200-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த மக்கள் தங்கள் சொந்த நாடுகளில் இருப்பது போல் வாழ்ந்து வருகிறார்கள். இங்கு வாழும் வெளிநாட்டவர்களில் இஸ்லாமியர், கிறிஸ்தவர்கள் மற்றும் இந்துக்கள் பெருமளவில் உள்ளனர்.
அமீரகம் ஓர் இஸ்லாமிய நாடாக இருந்த போதும், மதநல்லிணக்கத்துடன் அங்கு வசிக்கும் மற்ற மதத்தினரின் வழிபாட்டு முறைகளுக்கு மதிப்பளிக்கும் நாடாகவே இருக்கிறது.
அதற்கு எடுத்துக்காட்டாக எல்லா மதத்தவர்களுக்கும் அவர் அவர் விருப்பப்படி வழிபடுவதற்கு இந்து கோவில்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள், யூத ஆலயம் மற்றும் குருத்வாரா சீக்கிய கோவிலும் அமைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. துபாயில் உள்ள பர்துபாய், ஜெபல் அலி பகுதிகளில் இந்துக்கோவில்கள் மற்றும் குருத்வாரா உள்ளது. இந்த கோவில்களில் இந்தியாவில் வழிபடுவது போல் அனைத்து வழிப்பாட்டு சம்பிரதாயங்களும் கடைபிடிக்கப்படுகின்றன.
தற்போது அபுதாபியில் பிரமாண்டமாக கட்டி முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் காண இருக்கும் இந்து கோவில் அமீரகத்தின் சகிப்புத்தன்மை மற்றும் மதநல்லிணக்கத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
கடந்த 2015-ம் ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக அமீரகத்திற்கு முதல் முறையாக வருகை புரிந்தார். அப்போது அமீரகத்தில் வசிக்கும் இந்திய இந்து மக்களுக்காக மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க அபுதாபியில் இந்து கோவில் கட்டுவதற்கு அமீரக அரசு சார்பில் அனுமதி அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து துபாய்-அபுதாபி ஷேக் ஜாயித் சாலையில் உள்ள அல் ரக்பா அருகே முரைக்கா பகுதியில் 55 ஆயிரம் சதுர அடியில் (5.5 ஹெக்டேர்) இடம் அபுதாபி அரசு சார்பில் இந்து கோவில் கட்ட ஒதுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை அன்றைய அபுதாபி பட்டத்து இளவரசராக பொறுப்பு வகித்த தற்போதைய அமீரக அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் பிறப்பித்தார்.
இந்த அபுதாபி இந்து கோவில் கட்டுமான பணிகள் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தை சேர்ந்த பாப்ஸ் (போச்சசன்வாசி ஸ்ரீ அக்ஷார் புருஷோத்தம் சுவாமிநாராயண் சன்ஸ்தா) என்ற அமைப்புக்கு வழங்கப்பட்டது. இந்த அமைப்பு இந்தியா உள்பட இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் மொத்தம் 1,200 கோவில்களை கட்டி நிர்வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதைத்தொடர்ந்து அபுதாபிக்கு கடந்த 2017-ம் ஆண்டு வருகை புரிந்த பிரதமர் மோடி, பாப்ஸ் அமைப்பின் நிர்வாகிகளை சந்தித்து கோவில் கட்டுமான திட்டங்கள் குறித்து கேட்டறிந்தார்.
இதையடுத்து 2018-ம் ஆண்டு பிப்ரவரி 11-ந் தேதி அபுதாபியில் இந்து கோவில் அடிக்கல் நாட்டு விழாவை, பிரதமர் மோடி துபாயில் இருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். பின்னர் துபாய் ஒபெரா ஹவுஸ் அரங்கத்தில் நடைபெற்ற இந்தியர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கோவில் மாதிரியை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
இந்திய பாரம்பரிய முறைப்படி கோவில் கட்ட திட்டமிடப்பட்டு இருந்ததால் இந்தியாவில் இருந்து கைதேர்ந்த 3 ஆயிரம் சிற்பக்கலைஞர்கள் அபுதாபிக்கு வரவழைக்கப்பட்டு மும்முரமாக நடந்து வந்த பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
இந்த கோவில் தரைத்தளத்துடன் சேர்த்து 2 தளங்களாக கட்டப்பட்டு வருகிறது. மேலும் கோவிலின் கட்டுமான பணிகள் நிறைவடைந்து வருகிற 14-ந் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. விழாவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கோவிலை திறந்து வைத்து கும்பாபிஷேகத்தில் பங்கேற்கிறார். அன்றைய தினம் சிலைகளுக்கு பிரதிஷ்டை செய்யும் விழாவும் நடைபெறுகிறது. தொடர்ந்து பிப்ரவரி 18-ந் தேதி முதல் கோவில் பொதுமக்கள் வழிபாட்டுக்காக திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.