அபுதாபி இந்து கோவில் வரும் வெள்ளிக்கிழமை முதல் பக்தர்கள் தரிசனத்துக்காக திறப்பு

தினமும் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை வழிப்பட அனுமதி அளிக்கப்படுகிறது.

Update: 2024-02-27 14:25 GMT

அபுதாபி,

அபுதாபி இந்து கோவில்  வரும் வெள்ளிக்கிழமை முதல் பக்தர்கள் தரிசனத்துக்காக திறக்கப்படுகிறது. தினமும் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை வழிப்பட அனுமதி அளிக்கப்படுகிறது.

பிஏபிஎஸ் எனப்படும் ஸ்ரீஅஷர் புருஷோத்தம் சுவாமிநாராயண் சான்ஸ்தா என்ற அமைப்பு சார்பில் அபுதாபி ஷேக் ஜாயித் நெடுஞ்சாலையில் அல் ரக்பா பகுதி அருகே உள்ள முரைக்கா என்ற இடத்தில், அபுதாபி இந்து கோவில் கட்டப்பட்டுள்ளது.

இந்த கோவிலை கடந்த 14-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். தொடர்ந்து முன்பதிவு செய்த வெளிநாட்டு பக்தர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மட்டும் கோவிலுக்கு தரிசனத்துக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இந்தநிலையில் அபுதாபி பிஏபிஎஸ் இந்து கோவில் தலைமை குரு சுவாமி பிரம்மவிஹாரிதாஸ் அடுத்த மாதம் (மார்ச்) 1-ந் தேதி முதல் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவித்திருந்தார். அதன்படி வரும் வெள்ளிக்கிழமை முதல் (மார்ச் 1) அபுதாபி இந்து கோவிலில் பக்தர்கள் சென்று தரிசனம் செய்யலாம்.

சமீபத்தில் அயோத்தியில் திறக்கப்பட்ட ராமர் கோவில் போன்று நகரா கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்ட இந்த கோவில் வளைகுடா பிரதேசத்தில் மிகப்பெரிய கோவிலாகும். இந்த கோவிலில் 7 கோபுரங்கள் அமீரகத்தின் 7 பகுதிகளை குறிப்பிடுவதாக கட்டப்பட்டுள்ளது. அதேபோல அங்குள்ள சிற்பங்களில் அரபு கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையிலான காட்சிகள் இடம்பெற்றுள்ளது கூடுதல் சிறப்பாகும்.

ராமாயணம், மகாபாரதம் உள்ளிட்ட இந்தியாவின் 15 புராண கதைகளின் காட்சிகள், மாயன், ஆஸ்டெக், எகிப்து, அரபு, ஐரோப்பா, சீனா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளின் நாகரீக கதைகளும் இதில் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளது. அதேபோல யானை, ஒட்டகம் போன்ற விலங்குகள் மட்டுமல்லாமல் அமீரகத்தின் தேசிய பறவையான பால்கனும் இதில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சுவாமி சிலைகள் கோவிலில் உள்ள 7 கோபுரங்களுக்கு கீழ் இந்து கடவுள்களான ராமர், சிவன், ஜகன்னாதர், கிருஷ்ணர், சுவாமிநாராயண் (கிருஷ்ணரின் மறு அவதாரமாக கருதப்படுகிறது) திருப்பதி வெங்கடாலபதி மற்றும் ஐயப்பன் ஆகிய சுவாமி சிலைகள் இடம்பெற்றுள்ளன. கோவிலின் இருபுறமும் இந்தியாவின் புனித நதிகளான கங்கை மற்றும் யமுனை நதிகளில் இருந்து பெரிய கன்டெய்னர்கள் மூலம் கொண்டுவரப்பட்ட புனித நீர் பாயும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோவிலில் இடம்பெற்றுள்ள அனைத்து சிலைகளுக்கும் தீப ஆராதனை மற்றும் வழிபாடுகள் தினசரி நடந்து வருகிறது. வரும் வெள்ளிக்கிழமை முதல் (மார்ச் 1) பக்தர்கள் மற்றும் பொதுமக்களும் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்யலாம். தினமும் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த கோவில் திறந்திருக்கும். மேலும் மதம், மொழி, இனம் வேற்றுமைகளின்றி அனைவரும் கோவிலை வந்து பார்வையிடலாம் என பிஏபிஎஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்