சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா: 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

ஆனி திருமஞ்சன விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 11-ந் தேதி காலை நடக்கிறது.

Update: 2024-06-25 07:28 GMT

சிதம்பர,

சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுக்கு 6 மகா அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதில் ஆனி மாதம் நடைபெறும் ஆனித்திருமஞ்சனமும், மார்கழி மாதம் நடக்கும் ஆருத்ரா தரிசன விழாவும் சிறப்பு வாய்ந்தவை ஆகும்.

அந்த வகையில் நடப்பாண்டுக்கான ஆனித்திருமஞ்சன விழா அடுத்த மாதம் (ஜூலை) 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி அன்றைய தினம் காலை 6 மணி முதல் 7.30 மணிக்குள் சித்சபைக்கு எதிரே உள்ள கொடி மரத்தில் பஞ்ச மூர்த்திகள் முன்னிலையில் உற்சவ ஆச்சாரியார் கிருஷ்ணசாமி தீட்சிதர் கொடியை ஏற்றி வைத்து விழாவை தொடங்கி வைக்கிறார்.

அதன்பிறகு தினந்தோறும் காலை, மாலை இருவேளையும் வெவ்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலா நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 11-ந் தேதி காலை நடக்கிறது. மேலும் அன்றைய தினம் இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் நடராஜ பெருமானுக்கு ஏக கால லட்சார்ச்சனை நடைபெறுகிறது.

12-ந் தேதி அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது. அதன்பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும், பஞ்சமூர்த்தி வீதிஉலா வந்த பிறகு பிற்பகல் 2 மணிக்குமேல் ஆனி திருமஞ்சன தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது.

13-ந் தேதி பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்கு வீதிஉலாவுடன் ஆனித்திருமஞ்சன விழா முடிவடைகிறது. விழாவை முன்னிட்டு கிழக்கு கோபுர நிழைவு வாயில் முன்பு பந்தல் அமைக்கும் பணிகள் உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்