தர்ப்பணம் செய்வது எப்படி?

அமாவாசை தினத்தில் முன்னோர்களின் படத்திற்கு விளக்கேற்றி வழிபடுவது போல கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

Update: 2024-08-02 13:14 GMT

மூதாதையரின் ஆசிர்வாதம் பெறுவதன் அடையாளமாகவே பித்ரு தர்ப்பணம் செய்கின்றனர். வருடத்துக்கு ஒருமுறை காலம் சென்ற தம் முன்னோர்களை நினைவு கூர்ந்து அவர்களது ஆசிர்வாதத்தை நாடி பக்தியுடன் பித்ரு தர்ப்பணம் செய்ய வேண்டும் என்று ஆசாரவிதி போதிக்கின்றது.

சுத்தமும், சாந்தமுமான நதிக்கரை, கடற்கரையில் ஓர் இடம் தேர்ந்தெடுத்து இச்சடங்கை செய்ய வேண்டும். அதற்கு ஒருநாள் முன்னதாக விரதம் மேற்கொள்ள வேண்டும்.

காலையில் குளித்து விட்டு இருகைகள் கூப்பி ஓம்காரம் ஜெபித்து காலம் சென்ற மூதாதையரை நினைவு கூறும் போது பித்ரு தர்ப்பணம் ஆரம்பமாகும். முன்னோர்களிடம் கொண்டிருக்கும் தூய உறவின் அடையாளமாக பூஜை மலர்கள் அர்ப்பணம் செய்து ஆத்ம திருப்தியின் அடையாளமாக மூன்று முறை நீர் தர்ப்பணம் செய்து முன்னோர்களிடம் வேண்டுதல் செய்ய வேண்டும்.

தன்குலத்தில் தானம் செய்யும் வழக்கமும், ஞானமும், சந்ததி பாக்கியம் நிலை கொள்ளுவதற்காகவும், தான தருமங்கள் செய்வதற்கான செல்வங்கள் உண்டாகட்டும் என்றும் ஆசீர்வதிக்க வேண்டும் என்றே இந்த வேண்டுதல் செய்யப்படுகிறது.

மறைந்த முன்னோர்களுக்கு வருஷ திதி, தர்ப்பணங்கள் ஆகியவற்றை முறைப்படி செய்ய வேண்டும் தர்ப்பை புல்லை வைத்து, அதில் பித்ருக்களை ஆவாஹனம் செய்து எள்ளும் நீரும் தருவதை தர்ப்பணம் என்பார்கள். இறந்தவர் தினம் தெரியவில்லை என்றால், மிருகசீரிடம் மற்றும் மகம் நட்சத்திரத்தில் தர்ப்பணம் செய்யலாம்.

காரை இலை, உளுந்து, முப்பழம், காய், கிழங்கு, செந்நெல், வெல்லம், கோதுமை, நவதானியம், எள், பசும்பால், பாகற்காய், பலாக்காய், மாங்காய், மாதுளம் பழம், கறிவேப்பிலை, எலுமிச்சை, வாழைக்காய், இலந்தை, நெல்லி, திராட்சை, மிளகு, தேன், நெய், கண்டங்கத்திரி, கருணைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, சேனைக்கிழங்கு, சீரகம், ஏலம், அவரை, பிரண்டை, தூதுவளை, இஞ்சி, வாழைத்தண்டு, பசுந்தயிர், வள்ளிக்கிழங்கு போன்றவை சிராத்தப் பண்டங்களாகும்.

அமாவாசை தினத்தில் முன்னோர்களின் படத்திற்கு விளக்கேற்றி வழிபடுவது போல கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும். பசுவிற்கு அகத்திக்கீரை தானம் கொடுப்பது சிறந்தது.

மேலும் ஆன்மிக செய்திகளுக்கு.. https://www.dailythanthi.com/Others/Devotional

Tags:    

மேலும் செய்திகள்