30-12-2020 ஆருத்ரா தரிசனம் ஆனந்த வாழ்வுதரும் ‘திரு ஆதிரை’ தரிசனம்

திருவாதிரை தினத்தன்று, நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்படும்.;

Update:2020-12-30 23:24 IST
கீதையில், ‘மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்’ என்று சொல்லும் கிருஷ்ணர், ‘நட்சத்திரங்களில் நான் திருவாதிரை’ என்பதையும் பதிவு செய்கிறார். அத்தகைய மகத்துவம் நிறைந்த மார்கழி மாதத்தில் பவுர்ணமியோடு வரும் திருவாதிரை நட்சத்திரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில் அன்று அனைத்து சிவாலயங்களிலும் ‘திருவாதிரை’ திருவிழா கொண்டாடப்படுகிறது.

திருவாதிரை தினத்தன்று, நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்படும். இந்த நாளில் ஆனந்த நடனம் புரியும் நடராஜப் பெருமானை, சிதம்பரம் சென்று வழிபடுவது முக்தியை வழங்கும்.

ஒரு முறை மகாவிஷ்ணு பாற்கடலில் ஆதிசேஷன் மீது பள்ளிகொண்டிருந்தார். விஷ்ணுவின் பாதங்களில் அமர்ந்து தனது சேவையை செய்து கொண்டிருந்தாள் லட்சுமிதேவி. கண்களை மூடியபடி இருந்த திருமால் திடீரென்று, பரவச நிலைக்கு சென்று விட்டார். ஆனந்தத்தின் அவரது கைகள் தாளமிட்டன. மகாவிஷ்ணுவின் இந்த நிலையைக் கண்டு ஆதிசேஷனும், மகாலட்சுமியும் ஒன்றும் புரியாமல் திகைத்தனர்.

கண்விழித்து பார்த்த மகாவிஷ்ணுவிடம், அவர்கள் இருவரும் தங்கள் சந்தேகத்தைக் கேட்டனர். “சுவாமி.. என்றும் இல்லாத திருநாளாக, இன்று நீங்கள் இவ்வளவு பரவசத்தோடு காணப்பட்டதற்கு காரணம் என்ன?” என்றனர், ஆதிசேஷனும், லட்சுமிதேவியும்.

“திருவாதிரை நாளான இன்று, சிவபெருமான் ஆடிய ஆனந்தத் தாண்டவத்தை என்னுடைய ஞானக் கண்ணால் பார்த்தேன். அதைக் கண்டு மெய்சிலிர்த்ததால் தான் அத்தகைய பரவசம் என்னைத் தொற்றிக்கொண்டது” என்றார் மகாவிஷ்ணு.

தான் தினமும் சுமந்து கொண்டிருக்கும் நாராயணரையே மகிழ்ச்சியில் ஆழ்த்திய சிவபெருமானின் அந்த ஆனந்தத் தாண்டவத்தை, தானும் காண வேண்டும் என்று ஆவல் கொண்டார், ஆதிசேஷன். தன்னுடைய அந்த ஆசையை மகாவிஷ்ணுவிடமே தெரிவித்தார். இதையடுத்து அவருக்கு ஆசி அளித்து அனுப்பிவைத்தார், மகாவிஷ்ணு.

ஆதிசேஷன் பூலோகத்தில் பதஞ்சலி முனிவராக அவதரித்தார். அவருடைய உடல் அமைப்பு, இடுப்பு வரை மனித உடலும், இடுப்புக்குக் கீழே பாம்புத் தோற்றமும் கொண்டதாக இருந்தது. பதஞ்சலி முனிவர் பல காலம் தவம் இருந்தார். அதே போல் வியாக்ரபாதர் என்ற முனிவரும் ஈசனின் ஆனந்தத் தாண்டவத்தைக் காணும் பொருட்டு தவம் செய்து வந்தார். இந்த வியாக்ரபாத முனிவருக்கு புலிக்கால்கள் உண்டு. அதனாலேயே அப்பெயர் பெற்றார். இதையடுத்து அவர்கள் இருவருக்கும் ஒரு திருவாதிரை தினத்தன்று, சிதம்பரத்தில் தம் திருநடனக் காட்சியை சிவபெருமான் காட்டி அருளினார். ஈசன், தன்னுடைய ஆனந்தத் தாண்டவத்தை காட்டி அருளிய தினமே ‘ஆருத்ரா தரிசன நாள்’ ஆகும்.

திருவாதிரை நன்னாளில் நடராஜருக்கு நைவேத்தியமாக களி செய்து படைப்பார்கள். ‘களி’ என்பது ‘ஆனந்தம்’ என்றும் பொருள் தரும். அஞ்ஞானம் அகன்று மெய்ஞானம் தோன்றிய நிலையில் ஒரு ஆன்மாவானது, ஆனந்த நிலையில் இருக்கும். சத், சித், ஆனந்தம் என்ற தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்ததே திருவாதிரைக் களி நைவேத்தியம் என்று சொல்லப்படுகிறது.

மார்கழி மாத திருவாதிரை தினத்தன்று விரதம் இருந்து சிவபெருமானை பூஜித்து வழிபட்டால், நல்ல கணவன் கிடைப்பார். தாலிப் பலன் பெருகும். பாவங்கள் நீங்கும், அறிவும் ஆற்றலும் கூடும் என்பன போன்ற எண்ணற்றப் பலன்களைக் கொடுக்கும் விரதமாக இது உள்ளது.

மேலும் செய்திகள்