ஞானத்தை அருளும் ஹயக்ரீவர்

ஒரு முறை காக்கும் கடவுளான மகாவிஷ்ணு, இந்த உலகத்தையும், உலக உயிர்களையும் தனக்குள் அடக்கிக் கொண்டு, பிரளய கால சமுத்திரத்தில் யோக நித்திரையில் ஆழ்ந்திருந்தார்.

Update: 2017-02-28 02:30 GMT
ரு முறை காக்கும் கடவுளான மகாவிஷ்ணு, இந்த உலகத்தையும், உலக உயிர்களையும் தனக்குள் அடக்கிக் கொண்டு, பிரளய கால சமுத்திரத்தில் யோக நித்திரையில் ஆழ்ந்திருந்தார். பின்னர் உலக உயிர்களை மீண்டும் படைப்பதற்காக தன்னுடைய நாபிக் கமலத்தில் இருந்து பிரம்மனை தோற்றுவித்தார். அவருக்கு நான்கு வேதங்களையும் வழங்கி, அதற்கான விளக்கங்களை அளித்தார். அந்த உபதேசத்தைக் கேட்டு தெளிவுற்ற பிரம்மதேவன், படைப்புத் தொழிலைச் செய்யத் தொடங்கினார்.

இந்த நேரத்தில் மகாவிஷ்ணுவின் நாபிக்கமலத்தில் உள்ள ஒரு இதழில் இரண்டு தண்ணீர் திவலைகள் தோன்றின. அவை இரண்டும் மது, கைடபன் என்ற அசுரர்களாக உருவெடுத்தன. பெருமாளிடம் இருந்து தோன்றியதால் அந்த இரு அரக்கர்களுக் கும் ஆணவம் உண்டானது. தானும் மகாவிஷ்ணுவால் தோன்றியவர்கள் என்பதால், தங்களுக்கும் படைப்புத் தொழிலை செய்யும் தகுதி இருப்பதாக அவர்கள் கருதினர். குதிரை முகத்திற்கு தன்னை மாற்றிக்கொண்ட இரண்டு அசுரர்களும், பிரம்மதேவனிடம் இருந்து நான்கு வேதங்களையும் பறித்துக் கொண்டு போய், பாதாளத்தில் ஒளித்து வைத்தனர்.

வேதங்களை இழந்து மனம் வருந்திய பிரம்மன், மகாவிஷ்ணுவிடம் போய் சரணடைந்தார். இதையடுத்து மகாவிஷ்ணு வேதங்களை மீட்டு வருவதற்காக பாதாள உலகிற்குச் சென்றார். அங்கு இரண்டு அசுரர்களும் குதிரை வடிவில் இருப்பதைக் கண்டார். உடனே தானும் குதிரை முகம் கொண்டவராக மாறி, அசுரர்களுடன் போரிட்டார். இந்தப் போரில் இருவரையும் அழித்து, வேதங்களை மீட்டு வந்து பிரம்மனிடம் வழங்கினார். அசுரர்களின் கைபட்டதால் வேதங்களின் பெருமை குறைந்து விட்டதாக பிரம்மதேவன் கருதியதால், குதிரை முகத்துடன் வேதங்களை உச்சி முகர்ந்தார், மகாவிஷ்ணு. அந்த மூச்சுக்காற்றில் வேதங்கள் புனிதமடைந்தன.

மகாவிஷ்ணு குதிரை முகத்துடன் தோன்றிய இந்த வடிவம் ‘ஹயக்ரீவர்’ என்று போற்றப்படுகிறது. குதிரை முகமும், மனித உடலும் கொண்ட வடிவம் இது. மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் பெருமைக்குரியதாக ராமர், கிருஷ்ணர் போன்றோர் கூறப்பட்டாலும், ஹயக்ரீவரே சிறப்பு வாய்ந்தவராக கருதப்படுகிறார். ஏனெனில் கல்விக்கு அதிபதியாக விளங்கும் சரஸ்வதி தேவிக்கே குரு ஸ்தானத்தில் இருக்கிறார் ஹயக்ரீவர். அழிந்த எல்லா பொருட்களுக்கும் மத்தியில் அழியாத ஒரே செல்வம் கல்வி. அத்தகைய கல்வியை தந்தருளும் ஹயக்ரீவர் மிகச் சிறந்தவராக மதிக்கப்படுவதில் எவருக்கு தான் மறுப்பு இருக்க முடியும்?.

சில இடங்களில் ஹயக்ரீவரின் மடியில் லட்சுமி அமர்ந்திருப்பதைப் பார்க்கலாம். இந்த தோற்றத்தை லட்சுமி ஹயக்ரீவர் என்று அழைக்கிறார்கள். கல்வியும், செல்வமும் சேர்ந்திருக்கும் நிலை இது. இவர்களை வணங்கினால் கல்வியும், செல்வமும் ஒரே சேர கிடைக்கும் என்பதே உண்மை.

மேலும் செய்திகள்