பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் 11-ந்தேதி அனுமன் ஜெயந்தி
திண்டிவனம்-புதுச்சேரி நெடுஞ்சாலையில், திண்டிவனத்திலிருந்து 29-வது கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவில்.
திண்டிவனம்,
திண்டிவனம்-புதுச்சேரி நெடுஞ்சாலையில், திண்டிவனத்திலிருந்து 29-வது கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவில். மத்திய திருப்பதி என்று அழைக்கப்படும் இந்த கோவிலில் வலம்புரி ஸ்ரீமகாகணபதி, பட்டாபிஷேக ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி, ஸ்ரீவாரி வெங்கடாசலபதி மற்றும் 36 அடி விஸ்வரூப ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆகிய சுவாமிகள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்கள்.
இந்தநிலையில் ஜனவரி 1-ந்தேதி உலக நன்மைக்காக புண்ணிய நதிகளில் தீர்த்தவாரி செய்யப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் சொர்ண பாதுகைக்கு விசேஷ அர்ச்சனை அதிகாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறுகிறது. பக்தர்கள் அதிகாலை 5 மணி முதல் அனுமதிக்கப்படுவார்கள். அர்ச்சனைக்கு பிறகு பிரசாதம் வழங்கப்படும்.
அதனைத்தொடர்ந்து அனுமன் ஜெயந்தி விழா வருகிற 11-ந்தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் காலை 8.30 மணிக்கு ஆஞ்சநேய சுவாமிக்கு 2 ஆயிரம் லிட்டர் பால் மற்றும் வாசனை திரவியங்களுடன் விசேஷ திருமஞ்சனம் நடைபெறுகிறது. முன்னதாக 7-ந்தேதி பகவத் பிரார்த்தனை, மஹா சங்கல்பமும், 8-ந்தேதி எஜமான சங்கல்பம், புண்யாஹவாசனம் உள்ளிட்டவை நடைபெறுகிறது. 9-ந்தேதி பஞ்சஷூக்த ஹோமம் நடைபெறுகிறது. 10-ந்தேதி லட்சார்ச்சனை உள்ளிட்டவை நடைபெறுகிறது.
11-ந்தேதி பக்தர்களுக்கு அன்னதானமும், சிறப்பு பிரசாதமும் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீபஞ்சமுக ஜெயமாருதி சேவா டிரஸ்டின் தலைவர் - நிர்வாக அறங்காவலர் ஆ.கோதண்டராமன், செயலாளர் நரசிம்மன், உப தலைவர் ஆர்.யுவராஜன், அறங்காவலர்கள் எம்.பழனியப்பன், ஜி.செல்வம், எஸ்.நடராஜன் ஆகியோர் செய்துள்ளனர்.