ஆசியான் மாநாடு: முக்கிய தலைவர்களை சந்தித்த பிரதமர் மோடி
ஜப்பான் பிரதமர் இஷிபாவுடன் மிகவும் ஆக்கப்பூர்வமான சந்திப்பு நடைபெற்றது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.;
வியன்டியன்,
21-வது ஆசியான்-இந்தியா மற்றும் 19-வது கிழக்காசிய உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக 2 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி லாவோஸ் நாட்டுக்கு சென்றடைந்தார். அங்கு பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஆசியான்-இந்தியா அமைப்பின் 21-வது உச்சி மாநாடு லாவோஸ் தலைநகர் வியன்டியனில் வருகிற 11-ந்தேதி நடக்கிறது. இதைப்போல கிழக்கு ஆசியா அமைப்பின் 19-வது உச்சி மாநாடும் அங்கு நடைபெறுகிறது.
இந்த மாநாடுகளில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு அந்த நாட்டு பிரதமர் சோனக்சய் சிபன்டோன் அழைப்பு விடுத்தார். இதை ஏற்று பிரதமர் மோடி இந்த மாநாடுகளில் பங்கேற்கிறார். அதன் ஒருபகுதியாக லாவோஸ் நாட்டில் நடைபெறும் ஆசியான் மாநாட்டில் பிரதமர் மோடி முக்கியத் தலைவர்களைச் சந்தித்தார். இந்த மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி ஜப்பான் பிரதமர், பிலிப்பின்ஸ் அதிபர், ஆஸ்திரியா அதிபர் அல்பானீஸ், மலேசிய அதிபர் அன்வர் இப்ராகிம், ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் உள்ளிட்டோரை சந்திந்த புகைப்படங்களையும் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மேலும், ஜப்பான் பிரதமரைச் சந்தித்த புகைப்படத்தை பகிர்ந்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பிரதமர் மோடி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், ஜப்பான் பிரதமர் இஷிபாவுடன் மிகவும் ஆக்கப்பூர்வமான சந்திப்பு நடைபெற்றது. அவர் ஜப்பானின் அதிபரான சில நாள்களிலேயே அவரைச் சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். எங்கள் பேச்சுக்கள் உள்கட்டமைப்பு, பாதுகாப்பு மற்றும் பலவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கானது. கலாசார தொடர்புகளை மேம்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது எனப் பதிவிட்டுள்ளார்.