எப்போது குழந்தை பிறக்கும்? சீனாவில் புதுமண தம்பதிகள் ஒரு வருடத்திற்குள் கர்ப்பமடைய அதிகாரிகள் அறிவுறுத்தல்!

புதுமணத் தம்பதிகளா நீங்கள் - உங்களுக்கு எப்போது குழந்தை பிறக்கும்? என்று அரசு அதிகாரிகள் கேட்கிறார்கள்.

Update: 2022-10-28 09:06 GMT

பீஜிங்,

சீனாவில் மக்கள்தொகை குறைந்து வருவதை அந்நாட்டு அரசு ஒப்புக்கொண்டுள்ளது. இந்த நிலையில், புதிதாக திருமணமானவர்களின் விவரங்களை சேகரித்து அந்த தம்பதிகளுக்கு குழந்தை பிறந்துள்ளதா? என்பதை அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது.

சமீபத்தில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சியின் மிக முக்கியமான கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவரும், அந்நாட்டின் அதிபருமான ஜி ஜின்பிங் கூறுகையில், "சீனாவில் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கவும், நாட்டின் மக்கள்தொகை மேம்பாட்டு திட்டத்தை மேம்படுத்துவதற்கும் நாடு ஒரு கொள்கையை நிறுவும்" என்றார்.

புதிதாக திருமணமான ஒரு பெண் இதுகுறித்த தனது அனுபவத்தை ஆன்லைனில் பகிர்ந்து கொண்டார். அவர் பதிவிட்டதாவது, "திருமணமான பின், நான் கர்ப்பமாக இருக்கிறேனா? என்று உள்ளூர் அதிகாரிகள் என்னிடம் தொடர்புகொண்டு விவரம் கேட்கிறார்கள்" என்று தெரிவித்தார்.

இந்த தகவலை அவர் பகிர்ந்து கொண்ட சில நிமிடங்களிலேயே, பலரும் தாங்கள் இதுபோன்ற அணுகுமுறையால் பாதிக்கப்பட்டுள்ளதாக இணையத்தில் தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து அந்த ஆன்லைன் பதிவு அதிகாரிகளால் அகற்றப்பட்டது.

மற்றொரு பெண்மணி கூறுகையில், "கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் எனக்கு திருமணம் நடந்தது. இந்நிலையில், 'நீங்கள் திருமணமானவர், நீங்கள் ஏன் இன்னும் கர்ப்பத்திற்கு தயாராகவில்லை?' என்று அதிகாரிகள் என்னிடம் விசாரித்தனர்" என்று தெரிவித்தார்.

இன்னொருவர் கூறியதாவது, "நான்ஜிங் நகர அரசு பெண்கள் சுகாதார சேவை மைய அதிகாரிகள் என்னிடம் இரண்டு முறை விசாரித்தனர். புதுமணத் தம்பதிகள் ஒரு வருடத்திற்குள் கர்ப்பமாக இருக்க வேண்டும் என்று அரசாங்கம் விரும்புகிறது என ஒரு அதிகாரி என்னிடம் கூறினார்" என்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்