வாகனசோதனையில் 17 வயது சிறுவன் போலீசாரால் சுட்டுக்கொலை - பிரான்சில் 5 வது நாளாக வன்முறை
வாகன சோதனையின் போது போலீசாரால் 17 வயது சிறுவன் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையின் பிரான்சின் பல்வேறு பகுதிகளில் வன்முறை வெடித்துள்ளது.;
பாரிஸ்,
பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பிரான்ஸ் அருகே அமைந்துள்ள நகரம் நான்டெர்ரே. இந்நகரில் அல்ஜீரியாவை பூர்வீகமாக கொண்ட இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மவ்நியா என்ற பெண் தனது மகன் நிஹல் மெர்டொவ்ஸ் (வயது 17) உடன் வசித்து வந்தார்.
டெலிவரி பாய் வேலை செய்துவந்த நிஹல் கடந்த செவ்வாய்கிழமை காலை 9 மணியளவில் காரில் நான்டெர்ரே முக்கிய சாலையில் சென்றபோது அவரது காரை போலீசார் சோதனையிட மறித்துள்ளனர்.
போலாந்து பதிவெண் கொண்ட காரில் நிஹல் வந்த நிலையில் காரை போலீசார் இடைமறித்துள்ளனர். போலீசார் மறித்ததும் நிஹல் காரை நிறுத்திய நிலையில் அவரிடம் போலீசார் ஆவணங்களை கேட்டுள்ளனர். அப்போது போலீசாரின் உத்தரவிற்கு கீழ்படியாமல் போக்குவரத்து விதியை மீறி நிஹல் செயல்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நிஹலிடம் டிரைவர் லைசன்ஸ் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.
அப்போது, நிஹல் காரை திடீரென இயக்க முயற்சித்துள்ளார். காரில் தப்ப முயற்சிக்கிறார் என நினைத்து சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் நிஹல் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் மார்பில் குண்டு பாய்ந்து நிஹல் காரிலேயே உயிரிழந்தார்.
போக்குவரத்து விதிகளை மீறி, போலீசாரின் உத்தரவை மீறி காரை இயக்க முயற்சித்ததால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். ஆனால், உத்தரவை மீறினால் சிறுவனை கைது செய்திருக்கலாம் ஆனால் துப்பாக்கிச்சூடு நடத்தியது கண்டனத்திற்குரியது என பல்வேறு தரப்பினர் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலான நிலையில் போலீசாருக்கு கடும் கண்டனம் எழுந்தது.
17 வயது சிறுவன் நிஹலை சுட்டுக்கொன்ற போலீஸ்காரர் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த துப்பாக்கிச்சூட்டையடுத்து பிரான்சில் போலீசாருக்கு எதிராக வன்முறை வெடித்துள்ளது.
உள்ளூர் மக்கள், ஆப்பிரிக்கா அரேபிய நாடுகளில் இருந்து பிரான்சுக்கு இடம்பெயர்ந்தவர்கள் என பல்வேறு தரப்பினரும் பிரான்ஸ் அரசுக்கும், போலீசாருக்கும் எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டம் ஒரு கட்டத்தில் வன்முறையாக மாறியது. 5 வது நாளாக நடைபெறும் வன்முறையில் கடைகள், கார்கள், கட்டிடங்களை போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்தனர். வன்முறை பிற பகுதிகளுக்கும் பரவியதால் பிரான்ஸ் முழுவதும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
நான்டெர்ரே, மெர்செய்ல் உள்ளிட்ட பல நகரங்களில் வன்முறை பரவி வருகிறது. வன்முறையை தடுக்க நாடு முழுவதும் 45 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வன்முறையில் ஈடுபட்டதாக இதுவரை 1,300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வன்முறை மேலும் பரவாமல் இருக்க பிரான்ஸ் முழுவதும் உச்சபட்ச பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆனால், பல இடங்களின் வன்முறை பரவி வருகிறது.
அதேவேளை, போலீசார் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட நிஹல் மெர்டொவ்சின் இறுதிச்சடங்கு இன்று நடைபெற உள்ளது. நான்டெர்ரே நகரில் உள்ள இஸ்லாமிய மத வழிபாட்டு தலத்தில் இறுதிச்சடங்கு செய்யப்பட்டு பின்னர் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது. நிஹல் இறுதிச்சடங்கின் போது வன்முறை நடைபெறலாம் என்பதால் போலீசார் அதிக அளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.