கிழக்கு காங்கோவில் பதற்றம்; ஐ.நா. அமைதி காப்பாளர்கள் துப்பாக்கி சூடு... பலர் பலி என அச்சம்?
கிழக்கு காங்கோவில் விடுமுறையில் இருந்து திரும்பிய ஐ.நா. அமைதி காப்பாளர்கள் நடத்திய திடீர் துப்பாக்கி சூட்டில் பலர் பலியாகி இருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.;
கிழக்கு காங்கோ,
காங்கோ ஜனநாயக குடியரசு நாட்டில் பல ஆண்டுகளாக பயங்கரவாதிகளின் தொடர் வன்முறைக்கு மக்கள் இலக்காகி வருகின்றனர். இதனை தடுத்து நிறுத்தி, மக்களை பாதுகாக்க ஐ.நா. அமைதி காப்பாளர்கள் குழு தவறி விட்டனர் என கூறி பெரும் போராட்டம் வெடித்தது.
இதில் கடந்த திங்கட்கிழமை முதல் போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டதில், 3 அமைதி காப்பாளர்கள் உள்பட 20 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு சர்வதேச அளவில் பெரும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.
இந்நிலையில், விடுமுறைக்கு சென்று விட்டு காங்கோ ஜனநாயக குடியரசு நாட்டிற்கு, பணிக்கு திரும்பிய ஐ.நா. அமைதி காப்பாளர்கள் குழுவை சேர்ந்த ராணுவ வீரர்கள் கிழக்கு காங்கோ எல்லை பகுதியில் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
இதனால், காங்கோ-உகாண்டா எல்லை பகுதியில் கசிந்தி என்ற இடத்தில் மக்கள் பலர் பலியாகி இருக்க கூடும் என அஞ்சப்படுகிறது. வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதற்கான காரணம் தெளிவாக தெரியவில்லை.
இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது. சந்தேகத்திற்குரிய வீரர்கள் கைது செய்யப்பட்டு, எந்த நாட்டை சேர்ந்தவர்கள் அவர்கள் என விசாரிக்கப்பட்டு வருகின்றனர் என்று காங்கோவில் உள்ள ஐ.நா.வுக்கான பொது செயலாளரின் சிறப்பு பிரதிநிதி பின்டவ் கெய்டா கூறியுள்ளார்.