தைவான் எல்லையில் சீன போர் விமானங்கள் அத்துமீறல்

தைவான் எல்லையில் ஒரே நாளில் 33 சீன போர் விமானங்கள் பறந்ததால் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.;

Update:2023-05-27 22:00 IST

சீனா எச்சரிக்கை

சீனாவில் 1949-ம் ஆண்டு நடந்த உள்நாட்டு போருக்கு பின்னர் தைவான் தனி நாடாக பிரிந்தது. ஆனால் தைவானை தங்களது நாட்டின் ஒரு பகுதி என அதிபர் ஜின்பிங் தலைமையிலான சீன அரசாங்கம் கூறி வருகிறது. அதுமட்டுமின்றி தைவானுடன் வேறு எந்த நாடும் அதிகாரபூர்வ உறவு வைத்துக்கொள்ளக்கூடாது எனவும் சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால் தைவானை தனி நாடாக செயல்பட விடவேண்டும் என சீனாவை அமெரிக்கா வலியுறுத்தியது. அதன்படி தைவானுக்கு தனது ஆதரவை தெரிவிக்கும் வகையில் அப்போதைய சபாநாயகர் நான்சி பெலோசி தைவானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம்

இதனால் அதிருப்தி அடைந்த சீனா இதுபோன்ற செயலில் அமெரிக்கா இனி ஈடுபட்டால் தைவான் மீது படை பலத்தை பயன்படுத்தவும் தயங்கமாட்டோம் என எச்சரிக்கை விடுத்தது. இருப்பினும் சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் அதிபர் சாய்-இங்-வென் கடந்த மாதம் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அந்த நாட்டின் சபாநாயகர் கெவின் மெக்கார்த்தியை அவர் சந்தித்து பேசியது சீனாவின் கோபத்தை மேலும் அதிகரித்தது.

போர் பயிற்சி

அதுமுதல் தைவான் எல்லையில் சீனா அடிக்கடி போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் உருவாகியது.

இந்தநிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தங்கள் நாட்டு எல்லையில் 33 சீன போர் விமானங்கள் தென்பட்டதாகவும், அந்த போர் விமானங்கள் தைவானின் தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு பகுதியில் உள்ள வான் எல்லையில் அத்துமீறி நுழைந்ததாகவும் தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது. இது இரு நாடுகளிடையே போர் பதற்றத்தை மீண்டும் அதிகரித்து உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்