ஈகுவடாரில் மலையில் விழுந்து நொறுங்கிய விமானம்: 2 பேர் பலி
மரங்கள் அடர்ந்த மலைப்பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியது. மோதிய வேகத்தில் விமானம் தீப்பிடித்து எரிந்து எலும்புக்கூடானது.;
குயிட்டோ,
தென் அமெரிக்கா நாடான ஈகுவடாரின் கடலோர நகரமான குவாயாகில் நகரில் இருந்து, எல் ஒரோ மாகாணம் சான்டா ரோசா நகர் நோக்கி சிறிய ரக விமானம் ஒன்று சென்றுகொண்டிருந்தது. இந்த விமானத்தில் விமானி டேவிட் பரேனோ மற்றும் அகஸ்டோ வீரா, அட்லியன் யும்பாலா ஆகியோர் பயணம் செய்தனர்.
விமானம் சான்டா ரோசா நகரை நெருங்கிய போது திடீரென அதன் என்ஜினில் கோளாறு ஏற்பட்டது. இதனால் கட்டுப்பாட்டு அறை உடனான தொடர்பை அந்த விமானம் இழந்தது. இதனால் நடுவானில் இருந்து பாய்ந்து வந்த விமானம், மரங்கள் அடர்ந்த மலைப்பகுதியில் விழுந்துநொறுங்கியது. மோதிய வேகத்தில் அந்த விமானம் தீப்பிடித்து எரிந்து எலும்புக்கூடானது.
இந்த விபத்தில் விமானி டேவிட் பரேனோ மற்றும் அகஸ்டோ வீரா ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். அட்லியன் யும்பாலா பலத்த காயங்களுடன் உயிர்தப்பினார். அவரை மீட்புக்குழுவினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
ஈகுவடாரில் கடந்த இரண்டு மாதங்களில் 4 விமான விபத்துகள் நிகழ்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.