ஜிம்பாப்வேயில் மரண தண்டனை ரத்து

ஜிம்பாப்வேயில் மரண தண்டனையை ரத்து செய்வதற்கான சட்டமசோதா கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.;

Update: 2025-01-01 23:06 GMT

ஹராரே, -

ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேயில் பல ஆண்டுகளாகவே மரண தண்டனைக்கு எதிராக தீவிர பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு வந்தது. குறிப்பாக கடந்த 2017-ம் ஆண்டு அந்த நாட்டின் அதிபராக பொறுப்பேற்ற எம்மர்சன் மனங்காக்வா மரண தண்டனைக்கு எதிரான எதிர்ப்பை பற்றி பகிரங்கமாக பேசினார்.

1960-களில் சுதந்திரப் போரின் போது மரண தண்டனையை எதிர்கொண்டவரான எம்மர்சன் மனங்காக்வா, மரண தண்டனை முற்றிலுமான ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தார். மேலும் பொது மன்னிப்பு வழங்கும் அதிபரின் அதிகாரத்தை பயன்படுத்தி மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து வந்தார்.

இந்த நிலையில் நாட்டில் மரண தண்டனையை ரத்து செய்வதற்கான சட்டமசோதா கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மசோதா ஒரு மனதாக நிறைவேறியது. இதையடுத்து, மரண தண்டனை ரத்து செய்யும் சட்டமசோதாவுக்கு அதிபர் எம்மர்சன் மனங்காக்வா ஒப்புதல் அளித்தார். இதன் மூலம் ஜிம்பாப்வேயில் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஜிம்பாப்வேயில் தற்போது 60 கைதிகள் மரண தண்டனையில் உள்ளனர். புதிய சட்டத்தை அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து அவர்களின் தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜிம்பாப்வேயில் கடைசியாக கடந்த 2005-ம் ஆண்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்