பத்ம பூஷன் விருது பெற்றார் மைக்ரோசாப்ட் சிஇஓ சத்ய நாதெல்லா
பத்ம பூஷன் விருதுக்கு இந்த வருடம் தேர்ந்தெடுக்கப்பட்ட 17 பேரில் சத்ய நாதெல்லாவும் ஒருவர்.;
சான் பிரான்சிஸ்கோ,
2022-ம் ஆண்டிற்கான பத்ம விருதுகளை கடந்த ஜனவரி மத்திய அரசு அறிவித்தது. குடியரசு தினத்தை முன்னிட்டு, கல்வி, சமூக சேவை, பொது நிர்வாகம், அறிவியல் - தொழில்நுட்பம், இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த, 128 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்தப் பட்டியலில் 4 பத்ம விபூஷன், 17 பத்ம பூஷன் மற்றும் 107 பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டன.
அந்த வகையில் இந்த வருடம் பத்ம பூஷன் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 17 பேரில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓ-வான சத்ய நாதெல்லா-வும் ஒருவர்.
இந்த நிலையில் சத்ய நாதெல்லா இந்தியாவின் 3வது உயரிய விருதான பத்ம பூஷன் விருதை தற்போது பெற்றுள்ளார். சான் பிரான்சிஸ்கோ-வின் இந்திய கவுன்சில் ஜெனரல் டாக்டர் டி.வி.நாகேந்திர பிரசாத்திடம் இருந்து சத்ய நாதெல்லா விருதை பெற்று கொண்டார்.
பத்ம பூஷன் விருதைப் பெற்ற பிறகு பேசிய நாதெல்லா கூறுகையில், " குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் இந்திய மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விருதை பெற்றது பெருமையாக உள்ளது. இந்தியா முழுவதிலும் உள்ள மக்களுடன் தொடர்ந்து பணியாற்ற விரும்புகிறேன். அவர்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேலும் வளர்ச்சி அடைய உதவுவேன்" என்றார்.
ஐதராபாத்தை சேர்ந்த சத்ய நாதெல்லா அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தியா வர திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.