இஸ்ரேல் தொடர் குண்டு மழை: சிரியாவை நோக்கி படையெடுக்கும் லெபனான் மக்கள்
கடந்த 5 நாட்களில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் சிரியாவில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.;
பெய்ரூட்,
லெபனானில் இஸ்ரேல் போர் விமானங்கள் தொடர்ந்து குண்டு மழை பொழிந்து வருவதால் லெபனான் மக்கள் மூட்டை முடிச்சுகளுடன் சிரியாவை நோக்கி படையெடுத்து வருகின்றனர். கடந்த 5 நாட்களில் 1 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் சிரியாவில் அகதிகளாக தஞ்சம் புகுந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே லெபனானின் எல்லையையொட்டி சிரியா பகுதிகளிலும் இஸ்ரேல் வான்தாக்குதல்களை நடத்தி வருகிறது.
நேற்று முன்தினம் நள்ளிரவில் லெபனான் எல்லைக்கு அருகில் உள்ள சிரியாவின் காபர் யாபூஸ் நகரில் நடத்தப்பட்ட வான்தாக்குதலில் ராணுவ வீரர்கள் பலியானதாகவும், பலர் படுகாயம் அடைந்ததாகவும் சிரியா ராணுவம் தெரிவித்துள்ளது. லெபனானில் கடந்த திங்கட்கிழமை முதல் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் பலியானோரின் எண்ணிக்கை 700-ஐ தாண்டியுள்ளது. மேலும் ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.